மகாராஷ்ட்ர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பிறந்த வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கரை எதிர்ப்பவர்கள் ஹிந்து அடிப்படைவாதி என்று முத்திரை குத்த, ஆதரவாளர்களோ ஹிந்துத்துவத்தின் சின்ன
மாகவே போற்றுகின்றனர்.
ஹிந்து மதவாதி என்றும், மகாத்மா கொலையில் கூட்டுச் சதி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டவர் என்றும் அறியப்பட்ட சாவர்க்கர், ஜாதி, மத வேற்றுமைகளைக் களையப் பாடுபட்டவர் என்றோ, தீண்டாமையை எதிர்த்துப் போராடியவர் என்றோ, சமூக சீர்திருத்தங்களுக்காக உழைத்தவர் என்றோ, மக்களிடம் எடுத்துச் சொல்லப்படவில்லை. அவை குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பதும் வருத்தத்துக்குரிய செய்தி. மொத்தத்தில் வீர சாவர்க்கர் விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர், வரலாற்று ஆசிரியர், அரசியல் தலைவர், தத்துவ ஞானி எனப் பன்முகம் கொண்ட லட்சிய புருஷர் என்பதே உண்மை.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய காரணத்தால், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமானில் சிற்றறை எனப்படும் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்த சாவர்க்கர், விடுதலையாதும் சமூக சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார். ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் வகையில் பாரத சமூகத்தில் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளையும், மூட நம்பிக்கைகளையும் ஒழிக்க விரும்பினார். ‘தேவைக்கு அதிகமாகப் பேசுவதையும், வார்த்தை ஜாலங்களையும் விட்டுவிட்டு, மற்றவர்கள் செய்கிறார்களோஇல்லையோ, மனசாட்சிப்படியும், கொள்கைப்படியும், தினசரி அடிப்படையில் சீருதிருத்தங்களைக் கடைப்பிடிப்பவர் எவரோ, அவரே, உண்மையான சீர்திருத்தவாதி’ என்கிறார் சாவர்க்கர். சொன்னது மட்டுமின்றி, தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் செய்தார்.
ஜாதி வேற்றுமையை கடுமையாக எதிர்த்த சாவர்க்கர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பட்டிலின குழந்தைகள் எழுதுவதற்கு கரும்பலகைகளையும், வெண்மையான சாக்குக் கட்டிகளையும் வழங்கியதுடன் பெற்றோர்களுக்குப் பணமும் தந்து உதவினார். ‘பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றால், பிற்கால வாழ்க்கையில் ஜாதி வேற்றுமையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். ஜாதி வேறுபாட்டின் அவசியத்தையும் உணர மாட்டார்கள். ஒற்றுமையைப் பேணுவார்கள். எனவே, அரசாங்கம் தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தனியே நடத்தும் “சிறப்புப் பள்ளிகளை” மூடி அனைவரையும் ஒன்றாகப் படிக்க வழிவகுக்க வேண்டும். தனியான சிறப்புப் பள்ளிகள் என்ற வாசகமே பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் மனத்தில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது’ என்றார்.
நவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற ஹிந்து பண்டிகைகளின்போது சாவர்க்கர், பல்வேறு ஜாதி, சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் ஒன்றாகச் சென்று இனிப்புகளை வழங்குவார். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தையை சாவர்க்கரே எடுத்து வளர்த்தார். பட்டிலின குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்ததுடன், காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும் உபதேசித்தார்.1930ல் சாவர்க்கர் பாரதம் முழுவதும் கொண்டாடத்தக்க வகையில் முதல்முதலாக ‘கணேஷ் உற்சவத்தைத்’ தொடங்கி வைத்தார். இந்த உற்சவத்தில் பட்டியலினத்தவர்கள் பங்கேற்று, “கீர்த்தனைகளைப்” பாடுவதுடன், அவற்றைக் கேட்கும் உயர்ஜாதியினர் கீர்த்தனைகளைக் பாடியவர்களுக்கு மாலை மரியாதை செய்வதையும் உறுதிபடுத்தினார்.
இந்த உற்சவங்களில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கருத்தரங்குகளையும், அனைத்து ஜாதி மக்களும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் ‘சமபந்தி போஜனங்களையும்’ நடைமுறைப்படுத்தினார். கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையமுடியாத நிலையை உடைத்தெறிந்து, மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ள பல ஆலயங்களில் பட்டியலினத்தவர்கள் உள்ளே பிரவேசிக்கவும், ஆண்டவனை வழிபடவும், சம்ஸ்கிருத ஸ்லோகங்களைப் பாடவும், கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம்’ செய்யவும் சாவர்க்கரே காரணகர்த்தாவாக இருந்தார் எனில் மிகையல்ல.1931ல் ரத்னகிரியில் பதிபவன் கோயில் நிறுவப்பட்டது. அதன் நிர்வாக அறக்கட்டளையில் ஏனைய ஜாதிகளுடன், பட்டியலினத்தவரும் பிரதிநிதியாக இருப்பதைச் சாவர்க்கர் வலியுறுத்தி அமல்படுத்தினார். கோயில்களில் அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி போஜனத்துக்கும் ஏற்பாடு செய்தார்.
1921 செப்டம்பர் 21ல் ரத்னகிரி பதிபவன் கோயிலில் சாவர்க்கர் முன்னிலையில் பெண்களுக்கென பிரத்யேகமாக நடைபெற்ற முதல் சமபந்தி போனத்தில் 75 பெண்கள் பங்கேற்றனர். இந்த எண்ணிக்கை 1935ல் 400-ஆக உயர்ந்தது.1933 மே 1ம் தேதி பட்டியலினத்தவரையும் உள்ளடக்கி அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த ஹிந்துக்களுக்கான உணவகத்தைத் தொடங்கினார். இந்தியாவிலேயே ஹிந்துக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் உணவகம் இதுதான். அனைவருக்கும் உணவு பரிமாற, பட்டியலின மகர் இனத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்தார். ஜாதி வேற்றுமை குறிப்பாக தீண்டாமை நிலவிய கால கட்டத்தில் இதுபோன்ற ஒரு செயலை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
ஆனால், சாவர்க்கர் அதைச் சாத்தியப்படுத்தி வெற்றி கண்டார்.பிறப்பே ஒருவரின் ஜாதியை நிர்ணயிக்கும் என்னும் நடைமுறையைக் கடுமையாக எதிர்த்து, சாவர்க்கர் பேசுகையில், ‘பிறக்கும் குறிப்பிட்ட ஜாதியும், பரம்பரையுமே, மனிதனின் குணத்தை முடிவு செய்கிறது என்னும் நம்பிக்கை இன்னும் தொடர்கிறது. பிராமணனின் குணங்கள் ஏதுமின்றி, ஏழு தலைமுறைகளாக பிராமணனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் ஏதுமில்லாத ஒருவர், பிராமணர் என்று அழைக்கப்படுவதற்கு, அவரது முன்னோர்களில் ஒருவர் சுமார் 70 தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணருக்கு உரிய எல்லா நற்குணங்களுடன் இருந்தார் என்பதுதான் ஒரே காரணம்.
அதேபோல், ஒருவர் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காகத் தீண்டத்தகாதவனாக கருதப்படுவதற்கு, 70 தலைமுறைகளுக்கு முன்பு அவரது முன்னோர்களில் ஒருவர் தாழ்ந்த தொழிலை செய்தார் என்பதுதான் காரணமாகும். இவ்வகையில் ஒருவரது பிறப்பு மூலம் அவரது ஜாதியை முடிவு செய்யும் முறை அநீதி என்பதுடன், மனித இனத்தின் வளர்ச்சியைத் தடுத்துச் சேதப்படுத்துவதும் ஆகும். எனவே, இவ்வகை அமைப்பை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்’ என்று சாடினார்.ஜாதி கட்டமைப்பையும், தீண்டாமையையும் ஒழிக்கும் வழிமுறைகள் குறித்தும் சாவர்க்கர் பேசியுள்ளார். ‘சமூகப் புரட்சி ஏற்பட வேண்டுமானால், முதலில் நாம் பிறப்பு அடிப்படையிலான அமைப்பு முறையை ஒழிப்பதுடன் பல்வேறு ஜாதிகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் களைய வேண்டும். பாரத தேச விடுதலைக்காக வெள்ளையர்களுக்கு எதிராகப் போரிடுவதுபோல், ஜாதி பாகுபாடு, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன்’ என்றார்.
தீண்டத்தகாதவர்கள் ஆலயப் பிரவேசம் செய்வதற்காக அரும்பாடுபட்ட சாவர்க்கர் அந்நிகழ்வைக் கொண்டாட 1931-ல் ‘கடவுளின் சிலையைப் பார்க்க வேண்டும். அந்தக் கடவுளை நான் வணங்க வேண்டும்’ என்ற பாடல் இயற்றியபோது அவரது கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்ததாம். சாவர்க்கரைப் பொருத்தவரை, ஹிந்து சமூகம் ஏழு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளது. சில ஜாதிகளைத் தொடுவதற்குத் தடை, ஒன்றாக அமர்ந்து உண்ணத் தடை, கலப்புத் திருமணத்திற்குத் தடை, சில வேலைகளை மேற்கொள்ளத் தடை, கடல் கடந்து பயணிக்கத் தடை, வேதங்கள் வகுத்தபடி சடங்குகளைச் செய்யத் தடை, தாய் மதமாம் ஹிந்து மதத்துக்கு மீண்டும் திரும்பத் தடை ஆகிய ஏழு சங்கிலிகளை இச்சமூகம் உடைத்தெறியச் சாவர்க்கர் வேண்டுகோள் விடுத்தார். புரட்சியாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தொலைநோக்குச் சிந்தனைவாதி எனப் பன்முகம் கொண்டவராக இருந்தாலும், ஹிந்து மதப் பற்றாளர் என்னும் ஒரே முத்திரை மட்டுமே அவர் மீது குத்தப்பட்டுள்ளது. இது, அவரது நற்செயல்களை மறைக்கும், மறக்கடிக்கச் செய்யும் சூழ்ச்சியாகும்.