உற்பத்தி செய்யப்படும் சரக்குகளுக்கும் தோட்டத்தில் விளைவிக்கப்படுகின்ற விவசாயப் பொருட்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் அவற்றை உள்நாட்டுச் சந்தையிலும் வெளிநாட்டு அங்காடியிலும் விற்பனை செய்வது எளிது. அவற்றுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் ஈத்தாமொழி தேங்காய், விருப்பாட்சி மலைவாழைப்பழம், சிறுமலை வாழைப்பழம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. கேரளத்தில் விளைவிக்கப்படும் நேந்தரம் பழத்துக்கும் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைகின்ற மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்படவேண்டும் என விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மட்டிப்பழம் வடிவத்தில் மிகவும் சிறியது. ஒரு பழம் சுண்டு விரல் அளவுக்கே இருக்கிறது. மற்ற வாழைப்பழங்களைவிட இதில் சற்று இனிப்புச்சுவை மேலோங்கியுள்ளது, மாவுச்சத்து செறிந்துள்ளது. கொழுப்பு அறவே கிடையாது, மிகுந்த வாசனையுடையது, எளிதில் ஜீரணிக்கக்கூடியது. ஆறு மாத குழந்தைக்குக்கூட மட்டி வாழைப்பழத்தை தாராளமாகக் கொடுக்கலாம்.
மட்டி வாழைமரம் சுமார் 10 அடி உயரம் வளரக்கூடியது. மட்டிக்குலையில் வாழைப்பழங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும். ஒவ்வொரு குலையிலும் சுமார் 150 பழங்கள் வரை இருக்கும். 10 முதல் 12 சீப்புகள் கொண்டதாக மட்டிக்குலை இருக்கும். ஒரு பழத்தின் எடை சுமார் 10 கிராம் அளவுக்குத்தான் இருக்கும். மட்டிக்குலை ஏறத்தாழ பதினைந்து கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த ரக வாழை வாடல் நோயைத் தாங்கி வளரக்கூடியது. எனினும் இலைப்புள்ளி நோயால் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். உரிய பராமரிப்பையும் வேளாண் நேர்த்தி முறைகளையும் கையாண்டால் இலைப்புள்ளி நோய் தாக்காமல் காத்துக்கொள்ளலாம்.
மட்டி வாழைப்பழம் குறித்த தகவல்கள் தென் கேரளம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் தவிர பிற பகுதிகளில் பரவலாக்கப்படவில்லை. இதன்மீது உரிய கவன வெளிச்சம் இன்னும் விழவில்லை. இப்பின்னணியில் மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் அதை பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் எளிதாக விற்பனை செய்யமுடியும். மட்டிவாழை சாகுபடி மிக்ககுறைந்த நிலப்பரப்பிலேயே செய்யப்பட்டு வருகிறது. சாகுபடி பரப்பை விரிவாக்கவும் புவிசார் குறியீடு உதவும் என்று விவசாயிகள் கருதுகிறார்கள்.
மட்டி வாழைப்பழம் பெரும்பாலும் சந்தைகளில் அபூர்வமாகவே கிடைக்கிறது. ஏனெனில் குறைந்த அளவிலேயே இது உற்பத்தி செய்யப்படுவதால் உள்ளூரிலேயே இது விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் இதைக் கொடுப்பதால் அன்புப் பரி மாற்றமாகவும் இது விநியோகிக்கப்படுகிறது.
மட்டி வாழைப்பழத்தைப் பயன்படுத்தி, மதிப்புக் கூட்டு பொருட்களையும் தயாரிக்க முடியும். இவற்றுக்கெல்லாம் நல்ல தொடக்கமாக புவிசார் குறியீடு அங்கீகாரம் விளங்கும் என்பதால்தான் விரைவில் இது நனவாகவேண்டும் என்று மட்டி வாழை சாகுபடியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.