ஹீலர் பாஸ்கர் மீது புகார்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் ஆக்சிஜனை அதிகரிப்பது குறித்து ஹீலர் பாஸ்கர் யூ-டியூபில் காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில், ஹீலர் பாஸ்கர் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக கூறி, கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, இவர் கடந்த 2020 மார்ச் 17 அன்று, கொரோனா ஒரு இலுமினாட்டிகளின் சதி, பிரச்சனையை இல்லாதவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், ஊசிபோட்டு சாகடிக்கப் போகிறார்கள். காவல்துறை, சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் சொல்வதை செய்யக்கூடாது என்று கூறியிருந்தார். இதனால் அவர் கைதுசெய்யப்பட்டார் என்பதும், அதற்கு முன்னதாக, 2018ல் ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி’ என்ற வகுப்பை நடத்தவிருந்தார். காவல்துறை அப்போதும் அவரைக் கைதுசெய்து, நிகழ்ச்சியை நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் பொய்களையும், போலி மருத்துவ ஆலோசனைகளையும், வதந்திகளையும் நம்பாதீர்கள், இதுபோன்ற தேவையற்ற, தவறான, அறிவியல் பூர்வமற்ற போலி தகவல்கள் பகிரப்பட்டு வருவதை, அரசு தடுக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.