புத்த பூர்ணிமா மே 10, 2017
பகவான் புத்தர் கருணையின் உருவாகவே இப்பூவுலகில் வாழ்ந்தவர். அவரது அருட்பார்வையால் மகாநிர்வாணமாகிய மறுமையை அடைந்தோர் எண்ணற்றோர். அவ்வாறு மோட்சநிலை எதிய பெற்றியருள் பிட்சுணிகளின் சங்கத் தலைவியாகத் திகழ்ந்த படாசாராவின் வாழ்வு பகவானின் பெருங்கருணையைப் பறைசாற்றும் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.
பணக்காரப் பெற்றோருக்குப் பிறந்த பெண் ஒருத்தி, தன் தந்தையின்கீழ் பணிபுரியும் ஓர் இளைஞனுடன் மணம்புரிய விரும்பி, வீட்டைவிட்டு அவனுடன் வெளியேறினாள். அவளது மணவாழ்வு மலர்ந்தது. சில நாட்களில் அவள் கர்ப்பம் தரித்தாள். பிரசவ நேரத்தில் தன் தாய்வீடு செல்ல விரும்பிய அவளை, அவளது கணவன் தடுக்கவே, அந்த ஊரிலேயே அவள் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். இல்லறம் இனிதே நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவள் இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்தாள். இம்முறை பிரசவத்திற்குத் தன் தாயகம் செல்லவேண்டுமென்று அவள் அடம்பிடித்துத் தன் கணவன் மற்றும் முதல் குழந்தையுடன் புறப்பட்டாள். ஆனால் தாய்வீடு செல்லும் வழியிலேயே அவளுக்குக் குழந்தை பிறந்தது. மனைவியைத் தங்கவைப்பதற்காகக் குடிசையொன்று வேய முற்பட்டான் அந்தக் கணவன். அந்தோ பரிதாபம் ! காட்டில் நாகம் தீண்டி இறந்துபோனான் அவன்.
பிரசவ வலியும் அயர்ச்சியும் வருத்த, கணவனைக் காணாமல் தவித்த அவள், மிகவும் உடல்நொந்த நிலையில் அவனைத் தேடிச் சென்றாள். வழியில் இறந்து கிடந்த கணவனைக் கண்ட அவளது வாழ்வில் பேரிடி விழுந்தது. செய்வதறியாது திகைத்த அந்த இளம்தாய், கலங்கிய கண்களுடன் முதல் குழந்தையைக் கையில் பிடித்தபடி, இளம்சிசுவைக் கையில் ஏந்தியவாறே தன் தந்தையின் இருப்பிடம் நோக்கி நடந்தாள். வழியில் காட்டாறு குறுக்கிட்டது. இரு குழந்தைகளையும் பிடித்தவண்ணம் ஆற்றைக் கடக்க இயலாது என உணர்ந்த அவள், பச்சிளம் சிசுவை ஆற்றின் கரையில் கிடத்திவிட்டு, அதனை மறைக்கும் விதமாகச் சில புற்களைப் பரப்பிவிட்டு, முதல் குழந்தையுடன் ஆற்றைக் கடந்து சென்றாள். முதல் குழந்தையை அக்கரையில் இருத்திவிட்டு, மீண்டும் ஆற்றில் இறங்கி சிசுவை நோக்கி முன்னேறினாள். விதியின் விளையாட்டை யார்தான் தடுக்க முடியும்? அவள் ஆற்றின் நடுவே நிற்கும்போது, கரையில் கிடத்தப்பட்டிருந்த சிசுவை நோக்கி கோரப்பசியுடன் தீவிர வேகத்துடன் கழுகு ஒன்று பறந்து வந்தது. அதைக் கண்டு படபடத்த அந்தப் பெண், கழுகை விரட்டுவதற்காகக் கைகளை வேகமாக இங்கு
மங்குமாக ஆட்டினாள். கரையிலிருந்த முதல் குழந்தை, தன் தா தன்னை அழைப்பதற்காகக் கைகளை அசைப்பதாக எண்ணி ஆற்றில் இறங்கியது.
ஒருபுறம் கழுகின் இரையாக சிசு; மறுபுறம் ஆற்றில் இறங்கிய குழந்தை. எப்படிப்பட்ட பரிதாப நிலை அவளுக்கு! கடவுளே, அவளுக்கு உதவக் கூடாதா என நாமும் துடிக்கிறோமே! இளம்சிசு கழுகினால் கவரப்பட, முதல் குழந்தை ஆற்றினால் விழுங்கப்பட, சுயநினைவு பிசகியவளாக அந்தப் பெண் சித்தபிரமையுடன் அருகிலிருந்த நகருக்குள் நுழைந்தாள். தன் தந்தையின் வீட்டில் சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்ட அவள், அதே ஊரில் பைத்தியமாக அலைந்தாள். சிறு குழந்தைகளைக் கண்டாலே அழுவதும், உரக்கச் சிரிப்பதும், ஓடியணைக்க முற்படுவதுமாக அல்லறுற்றுத் திரிந்தாள். அவள் முற்றிய பைத்தியமாக ஊராருக்குத் தெரிந்தாள். ஆனால் முற்றும் உணர்ந்த ஞானியின் முன், முற்றிய பைத்தியம் ஒரு பொருட்டே ஆகாதன்றோ! புத்தபிரான் அந்த ஊருக்கு வந்தார்.
உலகியல் பைத்தியங்கள் அவர்தம் திருமுன் ஆடாது அசையாது அமர்ந்திருந்து கேட்க, இந்த உண்மைப் பைத்தியமோ பாடி ஆடி ஓடிச் சிரித்தது. எவ்வாறாயினும், பகவானின் சன்னிதிக்கு அவள் வரும் நாளும் வந்தது. அமைதியாக ஆண்டவனை எதிர்நோக்கி அந்த உன்மத்தமான பெண்ணும் நின்றிருந்தாள். உத்தமியாக வேண்டியவள் உன்மத்தமாக நிற்பது பகவானுக்கா தெரியாது ? அந்த அருள்விழிகளின் முன்பு, சிதிலமாகிக் கிடந்த அவளது சிந்தை ஒன்றுபட்டது. குரு என்னும் கருணைக் கடலில் அவள் மூழ்கத் துவங்கினாள். முத்துகுளிப்பதன்றோ அது! மோட்சமெனும் முத்து அவளது வாழ்வின் வித்தானது. இவ்வுலகின் நிலையாமை, இறைவனின் நித்தியத்தன்மை என வாழ்வின் நோக்கம் அவளது ஆழ்மனதில் பெருவெளியாக விரிந்தது. அன்று முதல் அவளது மனமும் விவரிக்க இயலாத பரமானந்தத்தில் நிலைபெற்றது. குருவருளால் திறம்பெற்ற அவள் பிட்சுணியாகி, 30 பிட்சுணிகள் கொண்ட அவர்தம் சங்கத்தை வழிநடத்தலானாள். அவளது துறவற நாமம் ‘படாசாரா’ என்பது. அதன் பொருள் பரிபூரண நல்லொழுக்கம் நிறைந்தவள் என்பதாகும். பரிபூரணமாகிய பரம்பொருளில் கரைந்த அவள் நல்லொழுக்கமிக்கவளாக இருந்ததில் வியப்பேது? அந்தப் பரிபூரணநிலையைச் சரணடைந்து நாமும் பரம்பொருளில் கரைய, நமக்கு குருவின் கருணைவிழி அருள்பொழியட்டும் !