கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை விரட்ட வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினமும் பல புதிய புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதுபோல் ‘எலுமிச்சை தெரபி’ என்ற பெயரில் வீடியோ ஒன்று வைரலானது. ரெய்ச்சூர் அருகேயுள்ள சிந்தானூரை சேர்ந்த 42 வயதான ஆசிரியர் பசவராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன், இந்த வீடியோவில் கூறியவாறு தனது மூக்கில் எலுமிச்சை சாறு விட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். ரெய்ச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வதந்தி காரணமாக ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இதுபோல சமூக ஊடகங்களில் பரவும் மருத்துவங்களை கைக்கொண்டு ஆபத்தை தேடிக்கொள்ளாமல் சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.