பாரத தொழிலாளர் தினம் மே தினமல்ல

இனி விஸ்வகர்மாவுக்கு ஜே!

இந்தியாவில் ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ரெயில்வேத் துறையில்தான் முதன் முதலில் நடைபெற்றதாகத் தகவல். 1862 ஏப்ரல்-மே மாத காலகட்டத்தில் ஹௌரா ரெயில் நிலையத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றது. வேலை நேரம் 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. இந்தியாவில் ரெயில் போக்குவரத்து துவங்கிய 9 ஆண்டுகளுக்குள் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது! சிகாகோ தொழிலாளர்களின் மே  தினப் போராட்டத்திற்கு 24 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது இந்த ரெயில்வேத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்.

மே தினம் பிறக்குமுன்பே…

அன்றைய வேலை நிறுத்தங்களில் மிக முக்கியமானது, தேசியத் தலைவர் பால கங்காதர திலகரை கைது செய்து தண்டிக்கப்பட்டதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்க பம்பா தொழிலாளிகள் மேற்கொண்ட வேலை நிறுத்தம். இந்தியத் தொழிலாளர்கள் மேற்கொண்ட முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான். 1908 ஜூலை 23 அன்று நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அடுத்த நாள் முதல் மக்கள் ஆயுதம் தாங்கிய போலீசையும் ராணுவத்தையும் எதிர்க்கொள்ளும் துணிச்சலை வெளிப்படுத்தினர். தங்களுடைய தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களிலும் உணர்வுபூர்வமாக தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த வேலை நிறுத்தங்கள் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.

குறிப்பாக ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ‘தூத்துக்குடி கோரல் காட்டன் மில்ஸ்’ நிர்வாகம் தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தி, வார விடுமுறை தர மறுத்து வேலை வாங்கி, கறுப்பர்கள் என்ற நிற வெறியோடு சின்ன சின்ன தவறுகளுக்கு கூட பிரம்படி நடத்தியது. ஆங்கில முதலாளிகளின் இந்த கொடூர நடவடிக்கைகளை அறிந்த கப்பலோட்டியதமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையும் சுப்ரமணிய சிவாவும் தொழிலாளர்களுக்கிடையில் விழிப்புணர்வுப்  பிரச்சாரம் நடத்தினர். 1908 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தூத்துக்குடியில் பொதுக் கூட்டங்களை நடத்தி அவர்களை போராட்டத்திற்குத் தயார்படுத்தினர். தேசபக்தர் பத்மநாப அயங்காரும் தன்னை இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். 1908 பிப்ரவரி 27ம் தேதி வ.உ.சி.சிவா தலைமையில் சுமார் 200  தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செதனர்.

ஆலைகள் மூடப்பட்டன. ‘போராட்டம் தொடர்ந்தால் அடக்குமுறை கையாளப்படும்’ என்று கலெக்டர் ஆஷ் மிரட்டியபோது ‘எங்களின் போராட்டம் வெற்றி பெறும்’ என வ.உ.சி. நறுக்குத்தெரித்தாற்போல் துணிவுடன் பதிலடி கொடுத்தார். ஒன்பது நாட்களுக்கு பிறகு போராட்டம் வெற்றி பெற்றது. இதனால் 50 சதவீத ஊதிய உயர்வு, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, அவசர காலத்தில் விடுப்பு, போன்ற உரிமைகளை இப்போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பெற்றனர். இந்திய தொழிலாளர் போராட்ட வரலாற்றில் முத்திரை பதித்த, வெற்றி பெற்ற முதல் போராட்டம் இது. இதன் விளைவாக வ.உ.சி. பின்னாளில் கடுமையான தண்டனைகளை அடைய இப்போராட்டமும் ஒரு காரணமாக அமைந்ததென்பது.

திணிக்கப்பட்ட மே தினம்

1884-ல் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் வேலை நேரம் 8 மணி நேரமாக நிர்ணயிக்க வேண்டுமென தொழிலாளர்களும் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் வன்முறையில் முடிந்து போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதால் 6 தொழிலாளர்கள் மரணம் அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 4 ஆம் தேதி அன்று நடத்திய போராட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கும் போலீசிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் காயமடைந்தனர். 4 தொழிலாளர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த துக்க சம்பவம்தான் மே தினத்திற்கு உருவம் கொடுத்தது. 1920  இல் ரஷ்யா முதல் முறையாக மே 1க்கு  விடுமுறை அறிவித்தது.

நாளைய பாரதத்தில்…

இந்திய கலாச்சாரத்திற்கு இந்த கொண்டாட்டம் ஏற்றதல்ல. ஏனெனில், மரணம் அடைந்த சம்பவம் துக்க தினம்; அதை கொண்டாடுவது நமது மரபல்ல. தவிர, 8 மணி நேர வேலை என்கிற கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தின் நினைவாக மே-1 கொண்டாடப்படுகின்றதெனில் சிகாகோவில் நடந்த போராட்டங்களுக்கு 24 வருடங்களுக்கு  முன்பாக 1862 ஏப்ரல் – மே மாத காலக்கட்டத்தில் கல்கத்தாவிலுள்ள ஹௌராவில் ரயில்வே தொழிலாளர்கள் 1200  பேர் அதே கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் செதனர் என்பதை மறக்கக்கூடாது. நமது பண்டைய பாரதத்தில் 8 மணி நேர வேலை என்கிற சட்டம் இருந்தது. ‘சுக்ர நீதியில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரம் வேலையும் ஒரு பகுதி விநோதமும் ஒரு பகுதி ஓவும் வழங்க வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர போனஸ் 12.5% வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு சட்டங்கள் சுக்ர நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதத்தின் பல இடங்களிலும் தொழிலின் அதிதேவதையான விஸ்வகர்மாவின் பிறந்தநாள் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜம்ஷெட்பூர் டாடா நிறுவனத்தில் தொழிலாளர்கள்  விஸ்வகர்ம ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். அஸ்ஸாம், உத்தரப் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விஸ்வகர்ம ஜெயந்திக்கு  சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நாளாக மே தினம் குறிப்பிடப்படுகிறது. ஆனால் துவக்க காலகட்டடத்திலேயே  கருத்து வேறுபாடுகள் கம்யூனிச, சோசியலிச இயக்கங்களில் இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது. ‘உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்‘ என்று கூறும் கம்யூனிஸ்டுகளே இந்தியாவில் 70 க்கும் அதிகமான பிரிவுகளாக பிரிந்திருக்கும் விநோதத்தைப் பார்க்கிறோம். இவ்வியக்கங்கள் பிளவுபட்டதெல்லாம் கருத்து வேற்றுமை காரணமாகத்தான். ஒரே தொழிற்சாலையின் முன்பாக வெவ்வேறு மூலைகளில்  நின்று கொண்டு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் தனித்தனியாக கோஷமிடும்போது உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைப்போம் எனக் கூறுவது கேலிக்கூத்து. எனவேதான், பாரதத்தின் மிகப் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கம் ‘தொழிலாளர்களே உலகை ஒன்று படுத்துங்கள்‘ என்கிற கோஷத்தை முன்வைக்கிறது. நமது கலாச்சாரம், பாரம்பரியத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தும்  விஸ்வகர்ம ஜெயந்தியை (செப்டம்பர் 17 ) கொண்டாடுவதுடன் அதை மத்திய மாநில அரசுகள் தொழிலாளர் தினமாக அறிவித்து சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றி தொடர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் அது நிறைவேறும் என நம்பலாம்.