தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் செய்துதரப்பட்டு உள்ளன. சென்னையிலும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் 12,255 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன. நோய் தொற்று உறுதியான உடனேயே ஆஸ்பத்திரிகளுக்கு பதற்றத்துடன் மக்கள் வந்துவிட வேண்டாம். ‘ரெம்டெசிவிர் இல்லையென்றால் உயிர் போய்விடும், அதை வாங்கி வாருங்கள்’, என்று அழுத்தம் தந்து டெல்லி மருத்துவக்குழு, தமிழக மூத்த மருத்துவக்குழு வகுத்துள்ள விதிமுறையை மீறி தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து மக்களுக்கு பீதி ஏற்படுத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும். யாரும் தவறான தகவல்களை பரப்பவேண்டாம். தேவையானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை தமிழக அரசு நிச்சயம் வழங்கும். இந்த வார இறுதிக்குள் ரெம்டெசிவிர் மருந்துகளை மக்களுக்கு பரவலாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அரசு தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் எவ்வளவு என்பதை ஆன்லைன் வழியாக தெரிந்துகொள்ள ஏதுவாக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.