கொரோனா பயம் வேண்டாம்

கொரோனாவை கண்டு தேவையற்ற பயம் வேண்டாம் என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘மக்களிடையே கொரோனா குறித்து தற்போது ஒரு தேவையற்ற பீதி காணப்படுகிறது. இதில் நன்மையை விட தீமையே அதிகம். கொரோனா தாக்கியவர்களில் பலர் ஆக்சிஜன் அளவு இயல்பாக இருந்தாலும், லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தாலும்கூட உடனே மருத்துவமனையில் சேர்வதை தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால், மருத்துவமனைகளில் கூட்டம் காணப்படுகிறது. உரிய சிகிச்சை கிடைக்காமல், தீவிர நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனாவை பொறுத்தவரை, 85 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்படும். காய்ச்சல் மருந்துகள் மூலமோ அல்லது சாதாரண ஜலதோஷத்தைப் போல் நீராவி பிடிப்பதன் மூலமோ எளிதில் குணமடைந்து விடலாம். கடுமையான நோய்த்தொற்று 10 முதல்15 சதவீதம் பேருக்குதான் ஏற்படுகிறது. அவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர், ஆக்ஸிஜன் அல்லது பிளாஸ்மா போன்ற கூடுதல் மருந்துகள் தேவைப்படலாம். ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும். தேவையின்றி மருந்துகளை வீட்டில் பதுக்கி வைக்கக்கூடாது. இதனால், சந்தையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜனை தவறாக பயன்படுத்தக்கூடாது. அதில் கசிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிரை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். பெரும்பாலான நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்துவதன் மூலம் மீட்க முடியும். ‘ரெம்டெசிவர்’ மருந்தின் பயன்கள், தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. அதனை ஒரு மந்திர சக்தியாக கருத வேண்டாம். இது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.