“கோடை” என்ற வார்த்தையை கேட்டாலே மனம் நடுங்குகின்றது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்துவமான உடல் இயல்புள்ளது. இதனை நம் ஆயுர்வேதத்தில் “பிரகிருதி” என்றழைக்கிறோம். உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் ஏற்றத்தாழ்வான மாறுபாட்டை கொண்டு நாம் இப்பிரகிருதியினை கண்டறிகின்றோம். இம்மூன்று தோஷங்களின் மாறுபாட்டுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் பருவகால மாற்றம் ஒரு முக்கிய காரணி. பித்த தோஷத்தை கட்டுப்படுத்தும் வகையிலான உணவு முறைகள், பழக்கவழக்கங்களின் மூலம் நாம் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
பித்த தோஷத்தைக் குறைக்கும் 10 முக்கிய உணவு பொருட்களின் பட்டியல் இதோ!
தேங்காய்
தேங்காய் இனிப்பு சுவையை கொண்டதால் இது, உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் பித்தத்தை குறைக்கும். தேங்காயில் உள்ள நீரில் பொட்டாசியம், மின் அயனிகள் எலக்ட்ரோலைட் சத்து நிறைந்துள்ளது. எனவே கோடையில் தேங்காய் நீரை பருகுதல் மிகுந்த பலனை அளிக்கும்.
முளைகட்டிய பச்சைப் பயிறு
முளைகட்டிய பச்சைப் பயிறு காலை உணவாக அல்லது மாலை சிற்றுண்டியாக உட்கொள்வதன் மூலம் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அஜீரண கோளாறில் இருந்து தப்பிக்கலாம்.
தர்பூசணி
தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற ஆண்டி ஆக்சிடண்ட் சத்து நிறைந்துள்ளது. இதனை பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ உட்கொண்டால் சிறுநீரை சரியாக பிரித்து வெளியேற்றி சிறுநீரகத்தையும் கல்லீரலையும் புத்துணர்வுடன் பாதுகாக்கிறது.
வெள்ளரி
வெள்ளரிக்காயில் சுமார் 80 சதவீதம் தண்ணீர் சத்து நிறைந்துள்ளது. இது தாகத்தைத் தணிப்பதோடு வெயிலினால் ஏற்படும் சிறுநீர் உபாதைகளையும் தடுக்கின்றது. வெள்ளரிக்காயுடன் ஒரு பிடி புதினா இலைகள், அரை எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சாறாகச் செய்தால் வெயிலுக்கு ஏற்ற சிறந்த பானமாக அமைகிறது.
மோர்
வெயிலின் தாக்கத்தில் மோர் பருகுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது மட்டுமின்றி செரிமான சக்தியை அதிகரித்து உடல் கழிவுகளை வெளியேற்றி பித்தத்தை குறைக்கிறது.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை, உடலில் வியர்வையை வெளியேற்றி சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாத்து உடல் சூட்டைத் தணிக்கிறது. இது செரிமான சக்தியை அதிகரித்து, உடல் கொழுப்பை குறைத்து, ரத்த நாளங்களை சீர் செய்கின்றது. எனவே எலுமிச்சை சாறு வெயிலுக்கு ஏற்ற பானம்.
புதினா, வேம்பு
புதினா இலைகள் வெயிலினால் வரும் சுவாசக் கோளாறு தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைகளை போக்கும் வலிமை கொண்டது. வேம்பு பித்தத்தை குறைத்து சுத்தமான ரத்தத்தை உடலில் விருத்தி செய்கின்றது. அதுமட்டுமின்றி கல்லீரல் மற்றும் கணையத்தை பாதுகாத்து ரத்தத்தின் சர்க்கரை அளவை சமன் செய்கிறது.
பசும் நெய்
ஆயுர்வேதத்தில் பசு நெய் என்பது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. நாள்தோறும் உணவில் பசு நெய் சேர்ப்பது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் புத்துணர்வைத் தந்து வெயிலில் இருந்து பாதுகாக்கிறது.
கீரை, நீர் காய்கள்
உடலுக்கு குளிர்ச்சி தரும் கீரைகள் நீர்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உபயோகித்தல் நலம். காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி வாழைத்தண்டு சாறு குடிப்பது வயிற்றை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்றி உடல் சூட்டைத் தணிக்கிறது.
நீராகாரம்
காலையில் நீராகாரம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறிவிடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது. அதனை காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடலை குளிர்விக்கும்.
கோடை காலத்தில் செய்ய வேண்டியவை
ஆயுர்வேதம் கோடைகாலத்தில் உடலை குளிர்விக்கும், அதிக வெப்பத்தில் இருந்து நிவாரணம் தரும் உணவுகளை உண்ணுங்கள் என்கின்றது. நீர் நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்ளுவது அவசியம். கோடையில் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது. காலையில் குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணையை உடலில் தேய்த்து குளிப்பது, படுக்கைக்கு முன் கை மற்றும் கால்களை கழுவுதல், பருத்தி ஆடைகளை அணிதல், சுவாச பயிற்சி செய்தல் போன்றவை கோடைகாலத்தில் மிகுந்த பலனை தரும் என்கிறது ஆயுர்வேதம்.
கோடை காலத்தில் செய்யக்கூடாதவை
கோடையில் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் புளிப்பு பழங்கள், சிட்ரஸ் பழங்கள், பீட்ரூட், கேரட், சிவப்பு இறைச்சி, பூண்டு, மிளகாய், தக்காளி, புளிப்பு கிரீம், உப்பு சேர்த்த சீஸ் ஆகியவற்றை உட்கொள்ளுதல் நம் உடல் சூட்டை அதிகரிக்கும். இவை அனைத்தும் உடல் எரிச்சலை அதிகரித்து செரிமானக் கோளாறை ஏற்படுத்தும். கோடை காலங்களில் உடலை குளிர்விக்க ஐஸ் குளிர்பானங்களை அதிகம் குடிக்கிறோம். அது தவறு. ஐஸ் குளிர்பானங்கள் செரிமானத்தை தடுப்பது மட்டுமின்றி வளர்சிதை மாற்றத்தை உருவாக்குகின்றது. எனவே, இவை அனைத்தையும் கோடைகாலத்தில் தவிர்த்தல் நலம்.ஆயுர்வேத கண்ணோட்டத்தில் கோடை என்பது நம் உடலின் வெப்பநிலை அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் உடலியல்ஆற்றலான பித்த தோஷத்தால் நிர்வகிக்கப் படுகிறது. மேற்கண்ட சில குறிப்புகளை கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்வோம்.
கட்டுரையாளர்; பேராசிரியை ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி