அல்ஜீரிய பேராசிரியருக்கு சிறை

அல்ஜீரியாவின் மக்கள் தொகையில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் சுன்னி முஸ்லிம்கள். அல்ஜீரியாவின் அரசியலமைப்பு இஸ்லாத்தை அரச மதம் என்று அறிவிக்கிறது, ஆனால் அரசியலமைப்பின் 36 வது பிரிவு  மதநம்பிக்கை சுதந்திரமும் வழங்குகிறது. எனினும், அங்கு யாராவது, நபியையோ அல்லது இஸ்லாத்தின் கொள்கைகளை எவ்வகையிலாவது இழிவுபடுத்தினால் அவர்களுக்கு அபராதம், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது.

இந்த நிலையில், புகழ்பெற்ற அல்ஜீரிய பேராசிரியரான ஜபல்கீர் தனது சமூக ஊடக பதிவில், ‘முஸ்லிம் பண்டிகையான ஈத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடுவது, முஸ்லிம்கள் பலர் சிறுமிகளை திருமணம் செய்துகொள்வது குறித்து தனது ஆட்சேபனையை தெரிவித்தார். மேலும், குர்ஆனின் சில பகுதிகளில் குறிப்பிடப்படும் நோவாவின் பேழையின் போன்ற கதைகள் உண்மையில் இருந்திருக்காது. அது ஒரு கட்டுக்கதையாக இருந்திருக்கலாம். குர்ஆனின் பாரம்பரிய வாசிப்புகள் நவீன மனிதனின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் கேள்விகளையும் பூர்த்தி செய்யாது. பல இஸ்லாமியவாதிகள் குர்ஆனில் எழுதப்பட்ட அனைத்தையும் உண்மை என எடுத்துக்கொள்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு அங்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் நீதிபதியிடம் தனது நோக்கம் ‘இஜ்திஹாத் தானே தவிர ஜிஹாத் அல்ல’ என்று கூறினார்.

முன்னதாக 2019ல் அவர், ‘ரமலான் நோன்பு கட்டாயமில்லை. அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு, பணத்தை நன்கொடையாக வழங்கலாம். அன்றைய சூழ்நிலையில், தீர்க்கதரிசியின் தோழர்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருக்கவில்லை. சிலர் மட்டுமே உண்ணாவிரதம் இருந்தார்கள், மற்றவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், அதற்கு அவர்கள் மற்றவர்களை ஒருபோதும் குற்றவாளியாகக் கருதவில்லை. ரமலான் நோன்பு கட்டாயமில்லை. இது இஸ்லாத்தில் ஒரு தேர்வுதான். ஆனால், இது குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை போல இது தொடங்கியது’ என கூறியிருந்தார். இதனால் அவருக்கு பல கொலை மிரட்டல்கள் அப்போது வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.