மேற்கத்திய சிந்தனையாளர்கள் ஜன நாயகத்தை உன்னிப்பாகக் கண்காணித்து விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். பாரதத்தில் ஜனநாயகம் நலிந்துவிட்டது என மூன்று பிரதான சிந்தனை அமைப்புகள் கருத்து தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. அமெரிக்காவை மையமாகக்கொண்டு இயங்கிவரும் ‘ஃபிரீடம் ஹௌஸ்’, ‘’முழுமையான சுதந்திர நாடு என்பதிலிருந்து பாரதம் சரிந்து ஓரளவு சுதந்திரமான தேசம் என்னும் நிலையை எட்டிவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளது. ஸ்வீடனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ‘வி டெம்’ என்னும் அமைப்பு பாரதத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடு என்று விமர்சித்துள்ளது.
இங்கிலாந்தை மையமாகக்கொண்டு இயங்கிவரும் ‘எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ்’ பாரதத்தில் காணப்படுவது பிறழ்ந்துவிட்ட ஜனநாயகம் என்று முத்திரை குத்திவிட்டது. அதுமட்டுமல்லாமல், தரவரிசைப் பட்டியலில் 55 வது இடத்திலிருந்த பாரதத்தை 53வது இடத்திற்கு இந்த அமைப்பு தாழ்த்திவிட்டது. ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தலைமையிலான பாஜக அரசும் சீர்குலைத்துவிட்டதாக இந்த மூன்று அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பாரதத்தில் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. உரிமைகள் படிப்படியாக சரிந்துவிட்டன என்றெல்லாம் மேற்கத்திய அமைப்புகள் விமர்சித்துள்ளன. ஊடக சுதந்திரமும் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புகளின் சுதந்திரமும் ஒடுக்கப்பட்டுள்ளதாகக் குறைகூறியுள்ளன. செய்தியாளர்கள் மீதும் சிறுபான்மையினர்மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களே இதற்கு சான்றுகள் என சுட்டிக்காட்டியுள்ளன. பாரதத்தில் 17 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். பாரத ஜனத்தொகையில் இது சுமார் 15 சதவீதம். இப்படிப்பட்ட முஸ்லிம் களை சிறுபான்மையினர் என மேற்கத்திய சிந்தனையாளர்கள் கூறுவது வேடிக்கைதான்.
அரசியல் சாசன 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது பாரத குடிமக்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, ஆகியவற்றின் மூலம் மோடி அரசு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டிவிட்டுள்ளது; மதக்கலவரத்தை ஏவிவிட்டுள்ளது, தேசி யத்தின் ஜனநாயகக் கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது என மேற்கத்திய சிந்தனையாளர்கள் விமர்சித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாசாரங்களிலும் ஜனநாயகம் எனில் என்ன என்பதற்கான புரிதல் காணப்படுகிறது. இது என்ன என்பதை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். கெட்டிப் படுத்தப்பட்ட இறுக்கமான வரம்புக்குள் ஜனநாயகத்தைக் குறுக்கிவிடமுடியாது. ஜனநாயகக் கோட்பாடு விசாலமானது. ஞாயமான நேர்மையான தேர்தல் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
‘ஃபீரீடம் ஹவுஸ்’, ‘வி டெம்’ ‘எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ்’ ஆகிய அமைப்புகள், தேர்த லில் மக்கள் பங்கேற்றால் ஜனநாயகக் விதிமுறை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது எனக் கருதுகின்றன. ஆனால், ரஸல் டால்டன், டோ சின், வில்லி ஜோ, (அண்டர்ஸ்டேன்டிங் டெமாக்ரஸி 2007) ஆகியோர் ஜனநாயக கோட்பாடு என்பது வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. அதை ஒற்றை வரையறைக்குள் சுருக்கிவிடமுடியாது. வளர்ச்சியடைந்த தொழில்மயமான ஜனநாயக நாடுகளில்கூட அரசியல் முன்னறிவு பூரணமாக உள்ளது, என கூறமுடியாதென்று தெரிவித்துள்ளார்கள்.
உண்மையான ஜனநாயகம் எனில் மக்களின் உண்மையான தேவைகளை செம்மையான முறையில் அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். ராமராஜ்யம்தான் ஜனநாயகம் எனக் கருதுவோரும் உள்ளனர். கிராமத்துக்கு மின்வசதி அளிக்கப்பட வேண்டும். வீட்டுக்கும் அது வழங்கப்பட வேண்டும். வங்கியில் கணக்கு தொடங்கப்பட வேண்டும். அதில் பணமும் போடப்பட வேண்டும். விருப்பமான மதத்தைப் பின்பற்ற தங்கு தடையற்ற சுதந்திரம் அளிக்கப்படவேண்டும். ஆயுதங்களை வைத்துக்கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் பலரும் பல்வேறு கோணங்களில் ஜனநாயகத்தை அர்த்தப்படுத்துகின்றனர்.
இன்னும் சிலருக்கு வீட்டில் தூய்மையான கழிப்பறை இருந்தால்போதும் என்னும் எண்ணமே மேலோங்கியுள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் இருக்கவேண்டும். அரசு வேலை கிடைக்கவேண்டும் உள்ளிட்டவையும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பாரதத்தில் ஜனநாயக வேர்கள் வெகு ஆழமாக ஊன்றி நிலைகொண்டுள்ளன. பொதுசகாப்தம் தொடங்குவதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு ஜனநாயக அரசுகள் இருந்துள்ளன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. 7லிருந்து 9ம் பொதுசகாப்தக் காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூர் கோயில் கல்வெட்டில் ஜனநாயக விதிமுறைகள் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு தேர்தலை எப்படி நடத்தவேண்டும், யார்யாருக்கு போட்டியிட தகுதியுள்ளது, யார்யாருக்கு தகுதியில்லை என்ற விதிமுறைகள் இந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. பாரதக் கலாச்சாரம் தர்மத்தில்தான் நிலைகொண்டுள்ளது. எனவே, இதுவும் ஜனநாயகமும் வெவ்வேறானது அல்ல. உண்மை ஒன்றுதான்.
ஆனால், அதற்குப் பல பெயர்கள் உள்ளன என்னும் கூற்று ஆழ்ந்த அர்த்தமுடையது. பன்மைத் தன்மைதான் நமது ஜனநாயகத்தின் அடிப்படை இயல்பு. பன்மைத்தன்மை என்பது சகிப்புத்தன்மை கொண்டது எனக் குறுகிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளக்கூடாது. பரஸ்பர மதிப்பு மற்றவர்களின் எண்ணங்களுக்கும் கருத்து களுக்கும் உரிய மதிப்பை அளித்தல் உள்ளிட்ட வற்றைக் கொண்டதுதான் உண்மையான ஜனநாயகம். பாரத ஜனநாயக மரபு நடைமுறையோடு ஒத்திசைவு கொண்டது. வெறும் சித்தாந்தமாக இதைப் பார்க்கக்கூடாது. ஆழ்ந்த அறிவுப்பூர்வமான விவாதங்களுக்கு இங்கு இடம் உண்டு. மேற்கத்திய சிந்தனை நிறுவனங்கள் அறிவுப்பூர்வமாக கருத்துகளைக் கட்டவிழ்த்துள்ளன. நுட்பமானவற்றை அலசியுள்ளன. எனினும், மேற்கத்திய சிந்தனையாளர்களின் பணி முழுமையானது என்றோ பாரபட்சமற்றது என்றோ உறுதிபட உரைக்க முடியாது. மேலோட்டமான கருத்துகள் பல கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தரவுகளும் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை. பாரதத்தில் இயங்கி வரும் ஆங்கில மொழி ஊடகம் மோடிக்கு எதிரானது, பா.ஜ.கவுக்கு எதிரானது, ஹிந்துக்களுக்கு எதிரானது. புள்ளிவிவரமும் திணிக்கப்பட்டதுதான். கொரோனா தொடர்பான புள்ளி விவரங்களிலும் இவ்வாறு திரிபுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இத்தகைய திரிபுகள் அரங்கேற்றப்பட்டன. ’பாரதத்தைச் சேர்ந்த பிரபல டிவி நெறியாளர் கைது செய்யப்பட்டார்கள். துன்புறுத்தப்பட்டார்கள். ஊடக சுதந்திரம் நொறுக்கப்பட்டுவிட்டது’ என்றெல்லாம் சரமாரியாக விமர்சனங்கள் வந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட செய்தியாளரை கைது செய்தது மோடி அரசல்ல. பாரதத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கவனிக்க வேண்டியது மாநில அரசுதான். மகாராஷ்டிராவில் உள்ள கூட்டணி அரசில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸும் அங்கம் வகிக்கிறது.
இந்த மாநில அரசுதான் நடவடிக்கை எடுத்ததே தவிர. மத்தியில் உள்ள மோடியின் பாஜக அரசல்ல. இதுதொடர்பான அடிப்படையை புரிந்துகொள்ளாத வகையில் லட்சக்கணக்கான கட்டுரைகளும் பதிவுகளும் அடுக்கடுக்காக வெளிவந்துவிட்டன. ஜனநாயகத்தைத் தரவரிசைப்படுத்தும் நிறுவனங்களின் பின் புலத்தின்மீதும் பார்வையை செலுத்த வேண்டியிருக்கிறது. ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ அமைப்புக்கு அமெரிக்க அரசு தாராளமாக நிதியுதவி செய்துவருகிறது. இந்த அமைப்புதான் ஈரானில் ரகசிய நடவடிக்கைகளை தூண்டிவிட்டது என்பதை மறந்துவிடமுடியாது.
‘வி டெம்’ நிறுவனம் இடதுசாரி சிந்தனைகளைக்கொண்ட அமைப்பு. இந்த அமைப்பு எப்போதுமே மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. ‘எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ்’ அமைப்பு மோடிக்கு எதிரான கருத்துகளையே பிரதானப் படுத்திவருகிறது. தேர்தலின்போது மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த அமைப்பு எடுத்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் அறிவியல் துறை இணைப்பேராசிரியர் பால், ஸ்டானிலேண்ட், “தரவரிசைப் பட்டியலோடு ஒத்திசைவு கொள்ளவேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தமுடியாது. வெவ்வேறு கண்ணோட்டத்தில் தரவரிசைகள் மாறுவது இயல்பு. ஒரே கண்ணோட்டம் தான் ஒப்பற்றது என பிடிவாதம் பிடிக்கவேண்டியதில்லை” என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார். எனினும், ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி தங்களது மேட்டிமையைப் பறைசாற்றி வரும் நபர்கள் இந்த ஆய்வு அமைப்புகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொள்கிறார்கள். விமர்சனங்கள் எவ்வளவு கூர்மையாகவும் ஆழமாகவும் இருந்தாலும் அதைவிட உண்மையே கூர்மையானது ஆழமானது.
நன்றி : பேராசிரியர் அவந்தஸ்குமார். ஆர்கனைசர்,
தமிழில் : அடவி வணங்கி