அந்த சிறுவனுக்கு நீண்ட நாட்களாக தீராத சந்தேகம். பெற்றோருக்கோ அவனுக்கு புரிந்த மொழியில் விளக்க முடியவில்லை. ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியை சந்திக்க திருவண்னாமலை சென்றனர். அந்த சிறுவன் ரமணரிடம் தன் கேள்வியை முன்வைத்தான். ரமணர் சிரித்துக்கொண்டே, இலையில் ஒரு தோசையை சிறுவன் முன் வைக்க சொன்னார். சிறுவனிடம், நான் எப்போ ‘ம்’ சொல்றேனோ அப்போ சாப்பிடனும். அடுத்த தடவை ‘ம்’ சொல்றப்போ இலையில் தோசை இருக்கக்கூடாது என்றார்.
சிறுவனுக்கோ உற்சாகம், சுற்றியுள்ளோருக்கு என்ன நடக்கிறது என்ற குழப்பம். தோசையில் கை வைத்தபடி ரமணரின் முதல் ‘ம்’முக்கு காத்திருந்தான் சிறுவன். சில நிமிடங்கள அவனை காக்க வைத்து ‘ம்’ என்றார் ரமணர். அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர் அடுத்த ‘ம்’ சொல்லிவிடக் கூடாதே என்று அவசர அவசரமாக தோசையை உண்டான் சிறுவன். புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்த மகரிஷி, கடைசி விள்ளலை அவன் எடுக்கும்போது ‘ம்’ என்றர். கப்பென்று கடைசி விள்லலை வாயில் போட்டுக்கொண்டான் அவன்.
அப்போது மகரிஷி, இரண்டு ‘ம்’களுக்கு நடுவில் உன் கவனம் எப்படி தோசை மீதும் என் மீதும் மட்டுமே இருந்ததோ அதேபோல, நீ எந்த காரியத்தை செய்தாலும், அடிநாதமாக இறைவன் மீது உன் கவனத்தை வைத்திருப்பதுதான் தியானம். இப்போ புரிந்ததா என்றார் புன்னகைத்தபடி.
ரமண மகரிஷியின் பிறந்த தினம் இன்று