அமெரிக்காவின் கிரேட்டர் பிலடெல்பியா பகுதியைச் சேர்ந்த ஹிந்து சங்கங்கள், ஹிந்து கோவில்கள் மற்றும் பாரத கலாச்சார சங்கங்களின் குழுவைச் சேர்ந்த 25 (ஜி-25) அமைப்புகளை சேர்ந்த பாரத அமெரிக்க தன்னார்வலர்கள், பிலடெல்பியா நகரில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தில் பெமா அமைப்பிற்காக தன்னார்வ தொண்டு செய்து வருகின்றனர். எச்.எஸ்.எஸ் எனப்படும் ஹிந்து சுயம்சேவக சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் சேவா இன்டர்நேஷனல் நட்த்தும் இந்த ‘சேவா வித் பெமா’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மார்ச் 22 முதல் ஏப்ரல் 18, 2021 வரை நடக்கிறது. 1,75,000 க்கும் மேற்பட்டோர் இந்த இயக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இந்த தன்னார்வ குழுவைச் சேர்ந்தவர்கள், பெயர் பதிவு, ஸ்கிரீனிங், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், தடுப்பூசிக்கு பிந்தைய கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். சராசரியாக 10 முதல் 12 தன்னார்வலர்கள் இதில் சேவை செய்து வருகின்றனர். பலர் இந்த சேவைக்காக நீண்ட விடுமுறையும் எடுத்துள்ளனர். முன்னதாக உள்ளூர் சுகாதாரம் மற்றும் ஈ.எம்.எஸ் தொழிலாளர்களுக்காக அவர்கள் 50,000 டாலர்கள் நிதி திரட்டினர், 2020 இல் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உணவுப்பொருட்கள், மளிகை பொருட்களை வழங்கி சேவையாற்றினர் என்பது நினைவுகூறத்தக்கது.