தி.மு.கவின் ஆட்சியில் 1967லிருந்து தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் துரோகங் களை இழைத்தவர்கள் தி.மு.க.வினர். குறிப்பாக, கருணாநிதியும் அவரது அடிவருடிகளும் நிகழ்த்திய சம்பவங்ளையும் சற்றே பார்த்தால் நம்பிக்கைத் துரோகமும், குள்ளநரித் தந்திரமும் வெட்ட வெளிச்சமாகும். ‘கூடா நட்புக் கேடாய் முடியும்’ என்ற சொல் கருணாநிதியால் பயன்படுத்தப்பட்டது. ‘கூடா நட்பு’ என யாரைக் குற்றம் சுமத்தினார்களோ அவர்களுடனேயே கூட்டணி அமைத்துக் கொலை பாதகச் செயலைச் செய்தவர்கள் தி.மு.க.வினர்.
தெரிந்தே தமிழகத்திற்குச் செய்த துரோகங்கள்
தமிழர்களின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைவிட அரசியல் லாபக் கணக்கைத்தான் பெரும்பாலும் கருணாநிதி கணக்கிடுவார். தமிழகத்தின் தலையாயப் பிரச்சினைகளில் தி.மு.க. தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்தது. நம்பிக்கைத் துரோகம் இழைத்த பிரச்சினைகள் பல இருப்பின் முக்கியமான மூன்று பிரச்சினைகளைக் காண்போம்.
கச்சத் தீவு
முதலாவது கச்சத்தீவு பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு காரணமே தி.மு.க, காங்கிரஸ்தான். ஆனால், எதுவும் தெரியாதது போல் மக்களை ஏமாற்றிக் கடந்த அனைத்துத் தேர்தல்களிலும் கச்சத்தீவு மீட்பை ஒரு தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்தனர். 1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு எந்தவித விவாதமும் நடத்தாமல் எழுதிக்கொடுத்தது காங்கிரசின் இந்திரா. பின்னர், ‘நேருவின் மகளே வருக’! நிலையான ஆட்சி தருக’ என்ற கருணாநிதியின் லாபக் கணக்கு காரணமாக மக்கள் நலன் கண்ணுக்குத் தெரியாமல் போனது. இதில் சில உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
28.06.1974-ல் கச்சத் தீவை பாரதம் இலங்கைக்கு தாரை வார்த்தது. அந்த ஒப்பந்தத்தில் பாரத, இலங்கைப் பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளைக் கச்சத் தீவில் உலரவைக்கலாம், ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இதுதவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவில் கலந்துகொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, தமிழக மக்களை சமாதானப் படுத்தியது மத்திய காங்கிரஸ் அரசு.
அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது. இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு, கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் பாரத மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன்பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தைவிட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.
23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்காலப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய், ”கோடிக்கணக்கான ஹிந்து சமயத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும் வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. இது ‘வாலி தீவு.’ இது ஒப்பந்தமல்ல, பணிந்துபோதல்” என்றார். வாஜ்பாயின் வேண்டுகோளின்படி, அன்றைய தமிழக பாரதிய ஜனசங்கத்தின் முக்கியத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘அரசியல் சட்டத் திற்கு எதிராக கச்சத் தீவு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது தவறானது’ என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில், கருணாநிதியின் அரசு, ‘இதுசம்பந்தமான எல்லா ஆவணங்களும் மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதால், எங்களிடம் அதுசம்பந்தமான எந்த ஆவணங்களும் இல்லை’ என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டதால், வழக்கு ரத்து செய்யப்பட்டது. இந்த உண்மையை கருணாநிதி அரசும், தி.மு.க.வும் வெளியே கூறுவது கிடையாது. அன்று பாராளுமன்றத்தில் தி.மு.க.வின் பலம் – 23 இருந்தும் ஒருவர்கூட எதிர்த்துப் பேசி விவாதம் செய்யவில்லை. இதில் 48 எம்.பி., வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் (இதில் தமிழ்நாட்டிலிருந்து 4பேர்) வாய் திறக்கவில்லை.
பார்வர்டு பிளாக் ராமநாதபுரம் எம்.பி., மூக்கையா, பெரியகுளம் தொகுதி முஸ்லிம் லீக் முகம்மது சரீப் இருவரும் எதிர்த்துப் பேச, அதற்கு ஆதரவு அளித்து, கச்சத் தீவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் வாஜ்பாய். ஆனால், மொத்த வரலாற்றையும் அப்படியே மாற்றி தனது அரசியலுக்கு இன்றுவரை பயன்படுத்துவது இதே தி.மு.க.தான். தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத நம்பிக்கைத் துரோகத்தை இழைத்தவர்கள் தி.மு.க.வின் கருணாநிதியும், காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தியும்தான்.
காவிரி
காவிரிப் பிரச்சினையில் தி.மு.க.வின் துரோக வரலாறு: – 1924-ம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுக் காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுத்திக்கொள்வது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் கருணாநிதி! இது கருணாநிதி தமிழக மக்களுக்கு காவிரிப் பிரச்சினையில் செய்த முதல் துரோகம்.
காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 1970ம் ஆண்டு முதன்முதலாக கடிதம் எழுதியதாகக் கூறித் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்தவர் கருணாநிதி. இவர்தான், “கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக்கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை” என்று 6.3.1970 அன்று பேரவையில் பேசி இருக்கிறார் என்பது சட்டமன்றக் குறிப்பேட்டில் உள்ளது. இது கருணாநிதி செய்த இரண்டாவது துரோகம்.
இதனைத் தொடர்ந்து, காவிரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றுள் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்தியத் திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் கருணாநிதி. இது கருணா நிதியின் மூன்றாவது துரோகம். காவிரிப் பிரச்சினை குறித்துப் பேரவையில் 8.7.1971 அன்று தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறி இருக்கிறார் கருணாநிதி.
ஆனால், இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன்கீழ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைப் பேரவை மேலவைக்குத் தெரிவிக்காமலேயே, இந்திரா காந்தியின்மூலம் தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார் கருணாநிதி! இது கருணாநிதியின் நான்காவது துரோகம்.
காவிரி நதி நீர் பகிர்மானம், நடுவர் போன்ற தீர்ப்பு அமல்படுத்தல் விஷயத்திலும் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே குறிக்கோளாகத் திரிவது தி.மு.க. தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியைவிடவும் 15 ஆண்டுகள் மத்தியில் தொடர்ந்து அமைச்சரவையில் பங்குபெற்ற கட்சி தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சரவை கேட்டுப் பெறுவதில் கறாராக இருக்கும் இவர்கள், தமிழகத்தின் மொத்தப் பிரச்சினைகளுக்கு முடிந்தமட்டும் தீர்வைக் கொடுத்திருக்கலாம். ஆனால், தி.மு.க., பெற்றது கப்பல் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என்று நல்ல வருமானம் வரும் துறைகள்தான். அதற்குப் பதிலாக நீர்வளத்துறை வாங்கி அதன்மூலம் தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயலாத தி.மு.கவின் துரோகம் கொடூரமானது.
ஈழம்
2009ம் ஆண்டு இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்ய துணைநின்றதால் ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து வெளிவரவேண்டும் என்று நினைத்த அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடை
பெற்ற திமுக முப்பெரும் விழாவில், ‘ஈழத்தமிழர்களுக்கு பாரதக் குடியுரிமை வழங்க வேண்டும்’ என்று தீர்மானம் இயற்றச் செய்தார். அதனடிப்படையில் அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் கருணாநிதி எழுதினார்.
ஆனால், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு பாரதக் குடியுரிமை என்ற முழக்கத்தை கையில் எடுத்த திமுக, இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்த 1983-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தை ஆட்சிசெய்த 12 ஆண்டுகளிலும், மத்திய அரசில் அங்கம் வகித்த 18 ஆண்டுகளிலும் தான் பேசிய, தீர்மானமாக நிறைவேற்றிய குடியுரிமையைப் பற்றி சிறு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்பதுதான் உண்மை.
-ஈரோடு சரவணன்