ரஜினிக்கு விருது

திரைப்பட துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1969 முதல் ‛தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டு வருகிறது. 51வது ‛தாதா சாகேப் பால்கே’ விருதினை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டு இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலைவா என வாழ்த்தியுள்ளார். ‘ரஜினி, பல தலைமுறைகளிடையே பிரபலமானவர். இவரது பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலரே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஆளுமை. அதுதான் ராஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியை தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்’ என்றார் மோடி. அதற்கு பதிலளித்துள்ள ரஜினி, மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களே, மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது மற்றும் உங்களது வாழ்த்துகளால் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி. உங்களுக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றி என தன் நன்றியை தெரிவித்துள்ளார்.