சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரி, மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த அறை உள்பட 18 இடங்களில் சமீபத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் எ.வ.வேலு பயன்படுத்திய முக்கிய டைரி ஒன்று வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளது. அதில் அவரது வரவு, செலவு குறித்த தகவலை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். டைரியில் உள்ள தகவலின் அடிப்படையில், கரூர் பைனான்சியர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதில், கணக்கில் காட்டப்படாத, ரூ.3.70 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அறக்கட்டளை வரவு செலவுகளை ஆய்வு செய்ததில், அறக்கட்டளை வருவாய், கல்லூரி கட்டண வசூல் போன்றவற்றை குறைத்து காட்டியது தெரிய வந்துள்ளது. இதனால், ரூ. 25 கோடி வருவாய் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.