கொரோனாவுக்கு எதிரான ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளை, மனிதாபிமான அடிப்படையில் பல நாடுகளுக்கு பாரதம் இலவசமாக வினியோகித்து வருகிறது. இதுவரை, 72 நாடுகளுக்கு, ஆறு கோடி டோஸ், கொரோனா தடுப்பூசிகளை, பாரத அரசு வழங்கியுள்ளது. அவ்வகையில், ஐ.நா அமைதிக் குழுவுக்கு, இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பரிசாக வழங்க உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, இரண்டு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, ‘கத்தார் ஏர்வேஸ்’ விமானம், மும்பை விமான நிலையத்தில் இருந்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு அனுப்பிவைத்தது மத்திய அரசு. அங்கு, அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின் அமைதிக் குழுவினருக்கு பிரித்து அனுப்பிவைக்கப்படும். நமது பாரத அரசின் இந்த உதவிக்கு, ஐ.நா பொது செயலர் ஆன்டோனியோ கட்டர்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளன. உலகின் 121 நாடுகளைச் சேர்ந்த, 85,782 பேர், ஐ.நா அமைதிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.