ஆரோக்கிய நங்கை

எள் உருண்டை
வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறம் வரும் வரை வறுத்துப் பின், அரைத்து சர்க்கரை கலந்து ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயன்: மாதாந்திரப் பூப்பு நன்றாக வருவதற்கு உதவும். கருப்பை நீக்கியவர்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் இழப்பை சரிசெய்ய உதவும்.

உளுந்தங் களி
கருப்பட்டியில்  தண்ணீர்  சேர்த்து அடுப்பேற்றிப் பின்,  லேசாக வறுத்துப் பொடியாக்கிய பச்சரிசி, உளுந்துப் பொடியுடன் ஏலப்பொடி, நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும் வரை கிண்டிக் கொள்ளவும்.
பயன்: உளுந்துக் களி பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் இடுப்புவலி, உடல் வலியைத் தடுக்கும். மாதவிடாய் சார்ந்த பிணிகளைக் களைய உதவும் மிகச்சிறந்த உணவு.

வெந்தயக் கஞ்சி
வெந்தயம், அரிசியை இளவறுப்பாக வறுத்து தேவையான அளவு நீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சிக்கொள்ள வேண்டும்.
பயன்: மாதாந்திரப் பூப்பு சரிவர நிகழவும், கருப்பையில் கட்டிகள் வளர்வதைத் தடுக்கவும் உதவும்.

கற்றாழை
கற்றாழை மடலைத் தோல் நீக்கி நன்றாகப் பத்து முறைக்குக் குறையாமல் கழுவி அதன் மீது உள்ள வழவழப்பு சென்ற பின், பனை வெல்லம் சேர்த்து காலையில் உண்டு வர கருப்பையில் ஏற்படும் பல பிணிகளைத் தடுக்கும், வெள்ளைப் படுதல் தீரும்.

வெள்ளைப் பூசணி
வெள்ளைப் பூசணிக்காயை உணவில் சேர்த்து வர உடல் சூடு குறையும். சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதலை சரிசெய்யும்.

கல்யாண முருங்கை
இதன் இலை மாதவிடாயின்போது ஏற்படும் வலியை தீர்க்கும். பருத்த உடலை இளைக்கச் செய்து பெண் மலட்டு நோயை நீக்கும்.

அத்தி
அத்திப்பழத்தை உண்டு வர  ரத்த சோகை, உடல் வலிமை இன்மை, உடல் சோர்வு நீக்கும்.

மாதுளை
மாதுளம் பழம் குருதியில் உள்ள சிகப்பு அணுக்களை அதிகரிக்க உதவும். இதனை மணப்பாகு செய்து பாலில் உட்கொள்ள கருத்தரித்த காலத்தில் ஏற்படும் வாந்தி, வாய்க் குமட்டலை சரிசெய்யும்.

-பிந்துஜா கங்காதரன்