தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை சார்பில் ஏழு உட்பிரிவு சமூகங்களை ஒரே சாதியாக அறிவிக்க கோரி பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றிகண்ட தங்கராஜை நமது செய்தியாளர் வெள்ளைத்துரை கண்ட நேர்காணல்.
தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை தொடங்கியதன் நோக்கம் அதன் பணிகள் குறித்து?
அரசியல் பணிகளை எங்கள் சமுதாயத்தில் நிறைய பேர் முன்னெடுத்துள்ளனர். சாதி அமைப்புகளை முன்னெடுத்தும் பலர் சென்றிருக்கிறார்கள். நான் சமூக மாற்றத்திற்கான வேலையை முன்னெடுத்துஉள்ளேன். ஒவ்வொரு சாதியும் சமூகமுன்னேற்றத்திற்கு பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அணுகுமுறை கையாண்டிருக்கிறார்கள். குறிப்பாக நாடார் மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அது அந்த சமுதாயத்தின் அடிப்படை மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்தது.
அதுபோல இந்த சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு வாழ்க்கைமுறை பற்றி மக்களிடம் எடுத்துச்சொல்லும் பணியை 17 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு புரிதலை சமுதாயங்களுக்கும் மற்ற சமுதாயத்திற்கும் புரிய வைத்துள்ளோம். இதன் மூலம் அறம் சார்ந்த பொருளாதாரம் அறம் சார்ந்த அரசியல் என்பதையும் முன்னெடுத்துச் செல்ல இருக்கிறேன்.
தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயர் அறிவிப்பு குறித்து?
மருத நிலத்தின் கடவுள் வேந்தன்.வேந்தன் தெய்வமானதால் தெய்வ வேந்தன் ஆனார். காலப்போக்கில் தேவேந்திரன் என்று மாறியது. இவர்கள் விவசாயம் பார்ப்பதால் வேளாளர் என்ற பெயரில் இம்மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
தேவேந்திரகுல வேளாளர் வரலாற்றுப்பின்னணி குறித்து?
இந்த சமூகத்தின் வாழ்வியல் மிகவும் ஆழமானது. உதாரணத்திற்கு குடும்பம் என்ற நாம் சொல்லும் சொல் குடும்பன் என்ற பெயரில் இருந்து வந்தது. கி.பி.1528 பழனி செப்பேடு குறிப்பிடும்போது குடும்பன், பன்னாடி, காலாடி, மூப்பன் பலகான் என்ற 5 வகுப்பும் பன்னிரு ஆயிரம் கோத்திரம் உடைத்தாராகிய தெய்வேந்திரர் வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறது. இந்த 7 உட்பிரிவுகள் எல்லாமே சேர்ந்து பின்பற்றுவது ஒரே பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கைமுறை. மள்ளர் என்ற சொல்தான் பின்னாளில் பள்ளர் என்று ஆனது. தமிழ்நாட்டில் இந்திரனை கடவுளாகக் கொண்டு இயங்குவது தேவேந்தேரகுல வேளாளர் சமுதாயம். இவர்கள் நிலப்பத்திரத்தில் இந்திர குலம், விவசாயம் என்றே எழுதப்பட்டிருக்கிறது.
தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயர் கோரிக்கைக்காக எவ்வளவு காலம் கடந்து வந்திருக்கிறீர்கள்?
டிசம்பர் 5, 2010 மதுரை தமுக்கத்தில் நடந்த தேவேந்திர திருவிழா என்ற இந்திரவிழா மாநாட்டில் முதல் முதலாக தேவேந்திரகுல வேளாளர் 7 உட்பிரிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் ஒரு பெயராக அறிவக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுவாக நான் அனைவரிடமும் சாதி பேதமின்றி நட்பாக பழகுவது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன். முதல் முறையாக இந்த கோரிக்கைக்காக மாநாடு கூட்டும்போது கொங்கு வேளாளர் சமுதாயத்தின் ஈஸ்வரன், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தின் பெரியவர் உடையப்ப செட்டியார், நாடார் சமுதாயத்தின் சார்பில் பெரிஸ் மகேந்திரன், பத்திரிகையாளர் குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். பின்னர் அரசாங்கத்திற்குக் கோரிக்கையாக பிற சமூகத்தின் ஆதரவோடு அளிக்கப்பட்டது.
கோரிக்கை வெற்றி பெற்றுவிட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
இந்த சமூகம் பண்பாட்டு அடையாளத்தினை முன்நிறுத்தி அதை பெருமைபடுத்தி தன்னை வெளிப்படுத்த விரும்புகிறது. அதற்கான வாய்ப்பை பிரதமர் துவக்கிவைத்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த சமூகம் சுயசார்போடு எழுந்து நிற்கவுள்ளது.
அடுத்தது பட்டியலின வெளியேற்றம் என்று பேசப்படுகிறது?
இந்தக் கோரிக்கை பொதுவாழ்வில் பிரபலமானது ௨௦௧௫ ஆகஸ்டு 6 ம்தேதி அமித்ஷா கலந்துகொண்ட மாநாட்டில்தான். இடஒதுக்கீடு மாறக்கூடியது இடஒதுக்கீடு அடிப் படையில் சாதிகளை பார்க்கக்கூடாது. அதன் பண்பாடு, கலாச்சாரம் அடிப்படையில் தான் பார்க்கவேண்டும். நான் இந்த விஷயத்தில் 2010ல் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் பேசுகையில் ஆர்வமாக கேட்டார். அதன் பின்னர்தான் ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் சமுதாய அமைப்பு இடம்பெற ஆரம்பித்தது. ஒவ்வொரு சமுதாய அமைப்பின் அரங்கம் என்பது அந்த சமுதாயத்தின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிப்பதாக அமைந்தது.
தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களது வயலில் விளைந்த விளைப்பொருட்களை களத்து மேட்டில் பிற சமூகத்திற்கு கொடுத்து பழக்கப்பட்டவர்கள். அப்போது எனது கை மேலிருந்தது. இடஒதுக்கீடு என்று வரும்போது எனது கை கீழே போய்விட்டது. இடஒதுக்கீடு மட்டுமே சாதியை முன்னெடுக்க முடியாது. ஒரு சமூகம் ஒரு சுய முயற்சியில் தான் முன்னேற முடியும். அரசாங்கத்தை சார்ந்திருப்பது என்று இல்லாமல் சுயபலத்தை சார்ந்திருக்க வேண்டும். மருத நிலத்தின் விவசாய மக்களாகிய நாங்கள் விவசாயம் செய்யும் நடைமுறையில் இருந்தே முன்னேற வேண்டும். அரசு கொடுக்கும் சலுகைகளிலிருந்து அது நாங்கள் விடுபட விரும்புகிறோம் என்று அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் நான் பேசியபோது நாடு முழுவதும் முக்கிய செய்தியாக பரவியது. இது தொடர்ந்து சமுதாயத்தின் கருத்தாக மாறியது.
ஏழு உட்பிரிவினர்களும் பட்டியலின வெளியேற்றத்தை முழுமனதோடு ஆதரிக்கிறார்களா?
இது கலாச்சாரத்தோடு இணைக்கப்பட்ட நிகழ்வு. இது எண்ணிக்கையால் இணைக்கப்பட்டதல்ல. நாங்கள் கலாச்சார ரீதியாக மட்டுமே 7 உட்பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளோம். தேவேந்திர குலவேளாளர் என்பது பண்பாட்டின் அடையாளம்.
ஏற்கனவே உள்ள சமூக கட்டமைப்பில் எதில் போய் சேருவீர்கள்?
ஏழு உட்பிரிவுகளும் ஒரே சமூகமாக மாறியபின்னர் எஸ்.சி. பட்டியலிலிருந்து வெளியேறி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இணைக்கவேண்டும். மத்திய அரசின் 18 சதவீட இடஒதுக்கீடு மாறாது. மாநில அரசு 8 சதவீதமாக உள்ள எங்களது சமுதாயத்தின் பங்கை புதிய பிரிவில் இணைக்க வேண்டியிருக்கும். அதனை மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்தவேண்டும். தேவேந்திர குல வேளாளர் என எப்படி பெயர் மாற்றம் ஏற்பட்டதோ அதேபோல, மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் இதுவும் சாத்தியமே. நடைமுறையைநாங்கள் பெருவாரியான மக்களிடம் இந்த கோரிக்கை குறித்து சிந்தனை உள்ளது. அது முழுமை பெற்று அரசிடம் கோரிக்கை வைக்கும்போது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
பிரதமருடனான சந்திப்பில் நிகழ்ந்தது என்ன?
மத்தியப்பிரதேசத்தில் ஒரு கருத்தரங்கில் பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றிருந்த அமித்ஷா தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகம் உள்ளது. அவர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள், இந்திரனை வழிபடக்கூடியவர்கள் என்று அந்தச் செய்தி தினமலர் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அதனைப் பார்த்ததும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் பொறுப்பாளர் நண்பர் ஸ்ரீநிவாசனிடம் பேசி பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி மூலமாக அமித்ஷாவை நமது நிகழ்ச்சிக்கு அழைக்க திட்டமிட்டோம். இந்த சமூகத்தின் புதிய சிந்தனைகள், மாற்றங்களை தேசம் முழுவதும் உருவாக்குவதற்கு அடிப்படையாக இந்த மாநாடு அமையும் என்று நினைக்கிறேன் என்று அமித்ஷா பேசினார். தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை ஆதரித்து அந்த மனுவில் கையெழுத்திட்டார்.
குறிப்பாக கலந்துகொண்ட ரெட்டியார், நகரத்தார், நாடார், யாதவர். கள்ளர், உள்ளிட்ட அனைத்து சமுதாய தலைவர்கள் முன்னிலையில் அமித்ஷா கையெழுத்திட்டார். பின்னர் சில நாட்களில் பிரதமர் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்து செப்டம்பர் 16ம் தேதி சந்திக்க முடிவானது. அவரது இல்லத்தில் 100 சமுதாய பிரமுகர்களோடு சந்திக்க அனுமதி கிடைத்தது. சாதாரண விவசாயியான பெரம்பலூர் பரமசிவம் தொடங்கி சமுதாயத்தில் ஐ.பி.எஸ். பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற காமராஜ் வரை அனைத்து தரப்பு பிரமுகர்களையும் அழைத்துச் சென்றேன்.
முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் டெல்லியில் மதிய விருந்து அளித்தார். 30 நிமிடங்கள் பிரதமர் முன்னிலையில் பேசினோம். இறுதியாக பிரதமர் பேசுகையில் தங்கராஜ் தனது கோரிக்கையை எடுத்துவைக்கும்போது கண்களில் நீர் ததும்ப பேசினார். கேட்டுக்கொண்டிருந்த நீங்களும் அதே நிலையில் இருந்தீர்கள். நான் உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். நீங்கள் தேவேந்திரன், நான் நரேந்திரன் என்று சொன்னதோடு விரைவில் நீங்கள் கேட்ட மாற்றம் சாத்தியமாகும் என்றார்.
சென்னையில் பிரமதர் அறிவிப்புக்குப் பின்னர் ஒட்டுமொத்த தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயம் என்ன சொல்கிறது?
அறிவிப்பு வெளியானதும் தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் கூட தேவேந்திரகுல வேளாளர்கள் மோடியின் படத்தை வைத்திருக்கிறார்கள். நெஞ்சில் தேவேந்திரன் படத்தை பச்சைக்குத்திக் கொண்டவர்கள். நரேந்திர மோடியின் பெயரையும் பச்சைக்குத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குலச்சாமி நரேந்திர மோடி என்று போஸ்டர், சுவர் விளம்பரத்தில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்கிறார்கள். இனி பிரதமர் நரேந்திர மோடியையும், தேவேந்திர குல வேளாளர்களையும் எந்த காலக்கட்டத்திலும் பிரிக்க முடியாது.
மற்ற சமூகத்தினர் எப்படி பார்க்கிறார்கள்?
தென்தமிழகத்தில் முக்குலத்தோர் சமூகத்தினருடன் குறிப்பாக கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட அத்தனைபேரும் ஆதரவு தருகிறார்கள். நகரத்தார், யாதவர், நாடார், ரெட்டியார் சமூக ஆதரவைப் ஏற்கனவே பெற்றுள்ளோம். ஏன் கொங்கு வேளாளர் சமூகத்தின் ஈஸ்வரன் கூட ஆதரித்து கையெழுத்திட்டுள்ளார். தற்போது அரசியல் நிர்பந்தம் காரணமாக மாற்றிப் பேசுகிறார் தவறில்லை.
மூன்று மாதத்தில் சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்ள உள்ள சூழ்நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பின் எதிரொலி எப்படியிருக்கும்?
பொதுவாக இந்த சமுதாயத்தின் வாக்கு தி.மு.கவை நோக்கி நகர்ந்துள்ளது. முதல் தடவையாக தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கான வாக்கு வங்கியாக மாறுவதற்கான சாத்திய கூறுகள் நிறையேவே இருக்கிறது. காரணம் கிராமங்களில் பா.ஜ.க உறுப்பினராக இல்லாதவர்கள் கூட 90 சதவீதம் நரேந்திர மோடியை ஆதரிக்கின்றார்கள். அவர்கள் முடிவெடுத்து பிரதமரை ஆதரித்து பா.ஜ.கவுக்கு ஓட்டளிப்பது என்ற மாற்றம் தன்னெழுச்சியாக நடந்துள்ளது.
தேவேந்திரகுல வேளாளர்களில் பிற மதங்களுக்கு மாறியவர்களிடம் மோடி எதிர்ப்பு உள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் பிற மதங்களுக்கு மாறிய சமூகத்தினர் உள்ளனர். தேவேந்திரர் கிறிஸ்தவ நல இயக்கம் என்ற அமைப்பைதொடங்கி உள்ளனர். அதன் சார்பாக கிறிஸ்துமஸ் விழாவை நடத்தினார்கள். அதற்கு பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கூட அவர்களை அழைக்காமல் சமுதாய தலைவர்களோடு கொண்டாடினார்கள். மதம் என்பது கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்தியுள்ளார்கள். இங்கு மதத்தைச் சொல்லி சமுதாயத்தை பிரிக்க முடியாது.
சமுகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை கை தூக்கிவிட பொருளாதார ரீதியான திட்டங்கள் உள்ளதா?
அறம் சார்ந்த பொருளாதாரம் என்று சொல்லியுள்ளோம். சமுதாயத்தில் அறை ஏக்கர், கால் ஏக்கர் நிலம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதில் விளையும் பொருட்
களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. விளைப் பொருட்களை நாங்களே வாங்கி மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தும் நிறுவனத்தை இந்த சமூகமே கார்ப்ரேட் நிறுவனம் போன்று தொடங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
விவசாயிகளான தேவேந்திரர்கள் மத்திய அரசின் புதிய விவசாய சட்டத்தை ஏற்கிறார்களா?
புதிய விவசாய சட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சாதகமானதுதான். அதில் குறிப்பாக பஞ்சாப், ஹரியான, உத்திரப்பிரதேச சிலப்பகுதிகளில் பிரச்சினை உள்ளது. அங்கு 10 சதவீதம் தேவைக்கு 100 சதவீத உற்பத்தி உள்ளது. அதனால் விவசாயி மீதமுள்ள விளைப்பொருட்களை சந்தைப்படுத்த தரகர்களை மண்டி உரிமையாளர்களை நாடவேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் விளைப்பொருட்களை கொள்முதல் செய்ய லெவி சிஸ்டம் உள்ளது. விவசாயிகள் விளைப்பொருட்களில் ஒரு பகுதியை அரசு தாணிய கிடங்கிற்கு அனுப்பவேண்டும். அவசரமாக பணத் தேவை உள்ள விவசாயிகள் குறைந்த தொகைக்கு விற்கிறார்கள். இதை சரிசெய்ய விவசாய விளைபொருட்களை நாங்களே வாங்கி அதைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களை விரைவில் தொடங்கவுள்ளோம்.