மதுரையை ஆண்டு வந்த ராணி மங்கம்மாள் வீரமும் கடவுள் பக்தியும் மிகுந்தவர். அன்பு கனிந்த நெஞ்சுடையவர். தான தருமங்கள் செய்து அறப்பணிகள் செய்து நீதியை உயிர்போலும் பாதுகாத்து வந்தார்.
ராணி தம் இளைய தம்பிக்கு ஆட்சியில் சில உரிமைகளை வழங்கியிருந்தார். ஆனால் அவன் அவற்றைத் தவறான வழிகளில் பயன்படுத்தி வந்தான். ஒருமுறை இவன் ஆட்சிக்கே மாறாக் களங்கம் ஏற்படும் முறையில் கொடிய பழியொன்றைச் செய்துவிட்டான். அரசியின் காதுகளில் இச்செய்தி விழுந்தது. உடனே தன் தம்பியை கைது செய்து, நீதி விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
தம்பி செய்த தவறுக்கு வழங்கவேண்டியது மரணதண்டனையே. அறங்கூறும் மன்றத் தீர்ப்பாளர்கள் அரசியின் தம்பிக்கு இத்தகைய கொடிய தண்டனையைத் தரத் தயங்கினார்கள். இச்செய்தியை அறிந்த ராணி மங்கம்மாள், மறுநாள் தானே அறமன்றத்துக்கு வருகை தந்தார்.
தம்பி கைதிக் கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனது கால்களிலும் கைகளிலும் இரும்புச் சங்கிலிகள் பிணைக்கப்பட்டும் வாடிய முகமும் கண்டதும் மங்கம்மாள் நெஞ்சத்தை அதிர வைத்தது. உடன் பிறந்த பாசம் அவரின் விழிகளில் நீர்த் துளிகளை மல்க வைத்தது. ஆயினும் மங்கம்மாள் நீதியின் பீடத்திலன்றோ அமர்ந்துள்ளார்.
அறங்கூறும் மன்றத்தின் உறுப்பினர்களை நோக்கித் தீர்ப்பை வழங்கக் கூறினார் ராணி. அவர்களோ தயங்கிக் கொண்டிருந்தனர். நிலைமையை உணர்ந்துகொண்டு தவறு இழைத்த தம்பிக்கு நீதியின்படி கொடுக்க வேண்டிய மரண தண்டனையை தீர்ப்பாக அறிவித்தார் ராணி மங்கம்மாள்.