ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மதிப்பு மிக்கது- இறுதியானது என்பதும், சட்டங்களுக்காக மக்கள் அல்ல- மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இடையிடையே ஒலித்த தேச விரோத கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களும் இந்தப் போராட்டம் குறித்த மீள்பார்வையை அவசியமாக்கியுள்ளன.
ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் 2016-ல் விதித்த தடையை நீக்கக் கோரி நடந்துவரும் வழக்கில் தீர்ப்பு பொங்கலுக்குள் வெளியாகியிருந்தால் இந்த மாபெரும் போராட்டமே நடந்திருக்காது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது மரபு. ஆனால், ஜனவரி 13-ம் தேதி, இவ்வழக்கில் தீர்ப்பு உடனடியாக வழங்கப்படாது என்றும் பொங்கலுக்குப் பிறகே வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தபோது, அதை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தமிழக மக்கள் உணர்ந்தனர். தாமதமான நீதி அநீதியாகவே கருதப்படும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏன் மறந்தது?
இவ்விஷயத்தில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது அவ்வாறான சாகசங்களில் பொறுப்பான மத்திய அரசு ஈடுபட முடியாது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க தமிழக அரசுத் தரப்பிலோ, மத்திய அரசுத் தரப்பிலோ தேவையான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாக, மக்களின் அதிருப்தி அரசுகள் மீது திரும்பியது. அதைக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பிய திரைமறைவு சதிகாரர்களின் உந்துதலே இந்தப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது. ஆனால், வெகு விரைவில், இந்தப் போராட்டத்தின் லகான் அவர்களிடமிருந்து மாணவர்களின் கரங்களுக்குச் சென்றுவிட்டது.
இதில் மிகவும் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடுபவர் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அதேசமயம், நீதிமன்றத்துக்கு எதிரான போராட்டங்களும் தடையை மீறி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளும் வழக்கில் நமக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிடும் என்று அவர் எச்சரித்தார். ஆனால், அவரது எச்சரிக்கை ஊடகங்களால் திரிக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டது. அதன் காரணமாக, பாஜக ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அதன் எதிரிகள் முயன்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பு வரவில்லை என்பதால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இல்லை என்றானவுடன், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் மாட்டுப்பொங்கலன்று அறவழியிலான சட்டமீறல் போராட்டங்கள் நடந்தன. அவற்றை மாநில அரசு சட்டப்படிக் கையாண்டது. அதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டங்களைத் துவக்கினர். அதன் பின்னணியில் அதிகார வேட்கை மிகுந்த ஆளும்கட்சிப் பிரமுகர்களும் இருந்தனர்.
வழக்கமாக மரபு, பாரம்பரியம் போன்ற அம்சங்களுக்கு எதிரானவர்களாகக் கொடி பிடிக்கும் நக்சல் ஆதரவு தமிழ்த் தேசியவாதிகளும் கிறிஸ்தவ உதவி பெறும் தன்னார்வ அமைப்புகளும் இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு அமைப்புகளும்கூட, இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு என்பது வழிபாட்டுக்குரிய தமிழ்ப் பண்பாடு என்பதை மறந்து, நாட்டின் பல பகுதிகளிலும் இதேபோன்ற பண்பாட்டு நடவடிக்கைகள் உள்ளன என்பதை மறைத்து, இந்தியத் தன்மையிலிருந்து மாறுபட்ட சாகச விளையாட்டாக ஜல்லிக்கட்டை அவர்கள் முன்னிறுத்தினர்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே சமயவழி பண்பாட்டு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திவந்த போராட்டம் காரணமாக, தேச விரோதிகளின் முயற்சி முழுமை பெறவில்லை. தவிர, பீட்டா அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் குளிர்பான நிறுவனங்களுக்கு எதிர்ப்பு, பசுவதைக்கு எதிர்ப்பு, நாட்டுக் காளையினங்கள் பாதுகாப்பு என்பதாக போராட்டத்தின் திசை மாறியது. இருப்பினும், இந்தப் போராட்டத்தைக் கொண்டு மத்திய அரசுக்கு இழுக்கு ஏற்படுத்த தீவிரமான முயற்சிகள் தொடர்ந்தன. உண்ணாவிரதம், போராட்டம் நடைபெற்ற பல இடங்களில் மத்திய அரசுக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரான வாசகங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்திய பாஜக அரசே! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கு!” என்ற வாசகம் ஒரு மென்மையான உதாரணம்.
இந்நிலையில் மாணவர்கள் போராட்டக் களத்துக்கு வந்தனர். அதையடுத்து வர்த்தகர்கள், மகளிர், தொழில்துறையினர், திரைத் துறையினரும் போராட்டக் களம் ஏகினர். அப்போது அது புதிய வடிவம் பெற்று, அரசியல்வாதிகள் போராட்டக் களத்தில் நுழையக் கூடாது என்று எச்சரிக்கும் அளவுக்குச் சென்றது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றோருக்கு எங்கிருந்து உத்விகள் கிடைத்தன என்பதைப் பரிசீலித்தால் பல பின்னணி உண்மைகள் புலப்படும். பல இடங்களில் திமுகவினரும், அதிமுகவில் ஒரு பகுதியினரும் போராட்டக்காரர்களுக்கு உணவு, வாகனம், ஒலிபெருக்கி, பந்தல், குடிநீர் வசதிகளைச் செதனர்.
ஆனால், மாணவர்களின் தன்னெழுச்சி, அவர்களை திரைமறைவில் ஆதரித்துக் கூர்தீட்டியவர்களின் எதிர்பார்ப்பை விஞ்சுவதாக மாறியபோது, தமிழக முதல்வரை சிக்கலில் மாட்டிவிட்டு அதிகார மாற்றம் காண விரும்பியவர்களின் எண்ணத்தில் இடி விழுந்தது. அப்போது அவர்களால் அந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மட்டுமே இயன்றது.
எது எப்படியோ, மக்கள் சக்தி இறுதியில் வென்றுவிட்டது. இப்போது மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நிதர்சனமாக்கிவிட்டது. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் அவ்வப்போது எடுப்பார் கைப்பிள்ளைகளாக – திரைமறைவிலிருந்து தூண்டியவர்களின் அம்புகளாக மாறியதுதான் சோகம்.
முதலாவதாக இந்த விவகாரத்துக்குக் காரணமே முந்தைய காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசுதான் (2011-ல் காளைகளை தடை செயப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது) என்பதை மறந்து, தற்போதைய மோடி அரசை வசை பாடியது. அடுத்து உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர முடியாது என்ற எளிய உண்மையைக் கூட உணராமல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் பலர் பேசியது.
போராட்டக் களத்தில் மாணவர்களை உசுப்பிவிட்டதில் தமிழ் ஊடகங்களின் உள்ளடி வேலைகளும் இருந்தன. கேமராவும் மைக்கும் பல இடங்களில் மாணவர்களை மாபெரும் வீரர்களாக உருக்கொள்ள வைத்தன. இந்த மாபெரும் போராட்டம் நல்ல தலைமையை உருவாக்கக் கூடும் என்ற நம்பிக்கையை சிதைத்த காட்சிகள் இவை.
உணர்ச்சிகரமான போராட்டங்களின்போது அறிவுப்பூர்வமான வழிகாட்டுதலும், நிதானமான தலைமையும் அவசியம். அதை இந்தப் போராட்டம் பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டு பண்பாட்டு மீட்பு நடவடிக்கை என்பதை உறுதி செத அளவில் மட்டுமே மாணவர்களின் விழிப்புணர்வில் தெளிவு காணப்பட்டது. தாங்கள் நடத்தும் போராட்டம்- அரசுகளுக்கு எதிரானதல்ல- நீதிமன்றத்தின் தன்னிச்சையான போக்கிற்கு மட்டுமே எதிரானது என்பதை வெளிப்படுத்தியிருந்தால், மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வை சிலாகித்திருக்கலாம்.
மாணவர்களின் இந்தக் குழப்ப சூழ்நிலைக்கு, போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத அமைப்புகளே காரணம் என்று சோல்லித் தெரிய வேண்டியதில்லை. தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள், இறை நம்பிக்கையற்ற குறுங்குழுக்கள், எஸ்.டி.பி.ஐ. போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், சர்ச் உதவியால் இயங்கும் தன்னார்வலர்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பலரும் ‘தமிழினப் பெருமிதம்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், தேசிய ஒருமைப்பாட்டை விமர்சித்தும் தங்கள் ஊடுருவலை நடத்தினர். அவர்களிடமிருந்து விலகி நிற்க போராட்டக்காரர்களின் உணர்ச்சிகரமான மனநிலை இடமளிக்கவில்லை.
சுதேசி இயக்கம், ஹிந்து முன்னணி, பசுப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தேசநலன் விழையும் அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டபோதும், அவர்களுக்கு வெகுஜன இயக்கமாக ஒரு போராட்டம் மாறும்போது அதை சுவீகரிக்கத் தெரியவில்லை. அந்த வெற்றிடத்தை தேச விரோதிகள் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் அரசியல் கட்சிகள் தங்கள் போராட்டத்தில் பங்கேற்பதை மாணவர்கள் தடுத்தது, அவர்களின் விவேகத்தை வெளிப்படுத்தியது. இந்தச் சூழலில் விஷம் விதைக்க முயன்ற திரை இயக்குநர் சீமானை போராட்டக் களத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றியது நல்லதொரு உதாரணம்.
இருப்பினும், உணவு உரிமை என்ற பெயரில் காளைகளையும் பசுக்களையும் கொடூரமாக வதைப்பதை ஆதரிக்கும் மதத் தீவிரவாதிகள் எவ்வாறு தங்களுடன் சேர்ந்துகொண்டு நாட்டுக் காளையினங்களைப் பாதுகாப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிடுகிறார்கள் என்பதை மாணவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்.
போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் மூலமாக புதிய அரசியல் தலைமை மலர வேண்டும். இந்த ஒரு வார காலத்தில் கிடைத்த அனுபவங்களை அசைபோட்டுப் பார்க்கும்போது, தங்கள் பிழைகளை மாணவ சமுதாயம் உணர முடியும். இந்த லட்சக்கணக்கான மாணவர் திரளில் நிச்சயமாக எதிர்கால சமுதாயத்துக்கான தலைமை உருவாக வாப்புண்டு. அதற்கு அவர்கள் சுயபரிசோதனைக்கு தங்களை ஆட்படுத்துவதும், பொது விவகாரங்களில் தங்கள் அறிவை விசாலப்படுத்துவதும் அவசியம்.