தான் பார்த்து வந்த வக்கீல் தொழிலை துறந்து, கல்வி, சமூக சீர்திருத்தம், தேச விடுதலைக்கு என தம்மை அர்ப்பணித்தவர் லாலா லஜபதி ராய். ஆர்ய சமாஜ், ஹிந்து மகாசபா இயக்கங்களில் பணியாற்றினார். ஆர்ய கெஜட், டிரிபியூன் போன்ற பத்திரிகைகளை நடத்தினார். மகாத்மா ஹன்ஸ் ராஜ் உடன் இணைந்து தயானந்தா ஆங்கிலோ – வேத பாடசாலையை லாகூரில் நிறுவினார். அமெரிக்காவில் இந்தியன் ஹோம் ரூல் இயக்கத்தை ஏற்படுத்தினார்.
லாலா லஜபதி ராய் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது லால்–பால்–பால் என்ற மூவர் அணிதான். 1857-ஐ போன்று மீண்டும் ஒருமுறை ஆங்கிலேயருக்கு எதிராக பாரத மக்கள் ஆயுதம் தாங்கி போரிடக் கூடாது என்பதற்காக, ஆலன் ஆக்டேவியன் ஹியுமால் திட்டமிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேயரை தாஜா செய்த இந்திய காங்கிரஸ் லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகியோரின் செயல்பாடுகளால் வேகம் எடுத்தது. சூரத் மாநாட்டில் லாலா லஜபதிராயை தலைவராக தேர்ந்தெடுக்க திலகர் தலைமையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தேசபக்தர்களின் கைகளுக்குள் காங்கிரஸ் சென்றுவிடக் கூடாது என்றெண்ணிய ஆங்கிலேயர்கள் காய்களை நகர்த்தினர். இதனால் லாலாவை தலைவராக்கும் முயற்சி தடுக்கப்பட்டதோடு, திலகரின் வேட்டி, சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டு, கூட்ட அரங்கில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட கேவலத்தையும் காங்கிரஸ் அரங்கேற்றியது. காங்கிரஸ் கலாச்சார ஆரம்பம் சூரத் மாநாடுதான் எனலாம்.
சைமன் கமிஷனுக்கு எதிராக அமைதிப் பேரணி சென்ற லாலா லஜபதி ராய் மீது ஆங்கிலேயர் தடியடி தாக்குதல் நடத்தினர். லத்தி சார்ஜ் மூலம் அடித்தே கொல்லப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதி ராய் ஒருவரே. தேசபக்தரான லாலா லஜபதிராயை காங்கிரஸில் வளரவிடக்கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் திட்டமிட்டே அவரை கொன்றனர்.
லாலா லஜபதி ராய் பிறந்த தினம் இன்று