மகான்களின் வாழ்வில் கண்ணனிடம் கட்டுண்ட பக்தி

காசியில் பிரேமாபாய் என்றொரு பக்தை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரே மகன். ராமகிருஷ்ணன் என்று பெயர். பையனுக்கு பத்து வயது இருக்கும்போது கணவன் காலமாகி விட்டான். இருந்தபோதும் மனம் கலங்காமல் தனது மகனுக்கு ராமாயணம், பாகவதக் கதைகளைக் கூறி அவனை சிறந்த பக்தனாக வளர்த்து வந்தாள்.

ஒருநாள் தாயும் மகனும் பாகவதச் சொற்பொழிவு கேட்கப் புறப்படும்போது எதிரில் இரண்டு சாதுக்கள் அவள் இல்லத்திற்கு வந்தனர். விருந்தினராக வந்த சாதுக்களுக்கு உணவளித்து உபசரிப்பது கடமை என்பதால் சொற்பொழிவுக்கு தனது மகனை மட்டும் அனுப்பி வைத்தாள். சாதுக்களுக்கு உணவு தயார் செய்து பரிமாறினாள். சாதுக்கள் வயிறார உண்டு வாழ்த்தி விடைபெற்றனர். சிறிது நேரத்தில் சொற்பொழிவு முடிந்து மகன் வீடுவந்து சேர்ந்தான்.

பிரேமாபாய் தனது மகனிடம் இன்றைக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் லீலையில் எதைப்பற்றி வர்ணித்தார்கள்?” என்று ஆவலோடு கேட்டாள்.

அம்மா! ஸ்ரீ கிருஷ்ணன் வெண்ணெய் திருடினான் என்பதற்காக யசோதை அவனை ஒரு கயிற்றால் உரலோடு கட்டிவிட்டாள்” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே, ஐயோ… என் கிருஷ்ணனுக்கு ஏன் இந்த கஷ்டம்?… ஒரு சிறு குழந்தையின் வயிற்றில் முரட்டுக் கயிற்றால் அழுத்திக் கட்டினால் என்ன வலி ஏற்படும் என்பது யசோதைக்கு ஏன் தெரியாமல் போய்விட்டது? ஏன் அப்படிச் செய்தாள்? கண்ணா! அழாதே… பயப்படாதே… இதோ நான் வந்து உன்னை அவிழ்த்து விடுகிறேன் …” என்று கூறிக்கொண்டே தெருவில் ஓடோடிச் சென்று சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டாள். அம்மா… அம்மா… என்று மகன் பின்னால் ஓடோடி வந்தான். ஹே கிருஷ்ணா… கோபாலா என்று பிரேமாபாய் முனகிய ஒலி மெல்ல அடங்கியது. ஆம். அவள் ஸ்ரீ கிருஷ்ணனோடு ஐக்கியமாகிவிட்டாள்.

இந்த பிரேமாபாய் மகன் தான் பிற்காலத்தில் ‘ஹரிதாஸ்’ என்ற பிரசித்தி பெற்ற மகானாக விளங்கினார்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்