தமிழகத்தில் கால் பதிக்கிறது மாற்றுத் திறனாளிகளுக்குக் கைகொடுக்கும் தேசிய அமைப்பு என்னால் முடியும் என்ற நேர்மையான சுயநலமில்லாத தேச சிந்தனை கொண்ட மாற்றுத் திறனாளர்களை ஒருங்கிணைப்பதும் தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் மாற்றுத்திறனாளர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணை ஆக்குவதே சக்ஷம் அமைப்பின் பணி.
சக்ஷம் 2008ல் நாகபுரியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத செயலாளரான சுரேஷ் ஜோஷி முன்னிலையில் துவக்கப்பட்டு, தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் 250 மாவட்டங்களில் இயங்கி வருகிறது.
அமைப்பு பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அறியும் முன் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு அமைப்பின் அவசியம், அமைப்பாக அவர்களை ஒருங்கிணைப்பதன் அவசியம் யாது என்பதே.
சமூகத்தில் மனிதர்கள் நிம்மதியாக தங்கள் உரிமைகளுடன் வாழ்வதற்கு பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதிலும் உடல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதன் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கின்றது. மேலும், இவர்களில் பலர் பெற்றோராலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் துன்பங்கள் மிக மிக அதிகம். இவற்றைத் தாண்டி இவர்கள் அனைவரும் நல்ல மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு பெறுவது என்பது அரிதான விஷயம்தான்.
சக்ஷம் போன்ற ஒரு அமைப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கவேண்டியதன் காரணங்கள்:
* இன்றைய சமூக சூழலில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் புறக்கணிக்கப்படுகின்றனர்.
* மாற்றுத்திறனாளிகள் என்றாலும் அவர்களிடம் திறமை, சக்தி, அறிவாற்றல் என பலவும் நிறைந்திருக்கும். அத்தகைய மாற்றுதிறனாளிகள் சுமார் 3 கோடி பேர் நம் நாட்டில் உள்ளனர். இவர்களின் மனித சக்தி சரிவர நாட்டிற்கு பயன்பட வேண்டும்.
* நமது அரசியல் சாஸனப்படி அவர்களுக்கும் எல்லாவித அடிப்படை உரிமைகளும் உள்ளன என்பதை அவர்கள் உணர்ந்து வாழ வழிசெய்ய வேண்டும்.
* நாட்டின் சமூக நல திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மாற்று திறனாளிகளின் குடும்பத்தினர் அல்லது பாதுகாவலர்க்கு முழுமையாக தெரியப்படுத்த வேண்டும்.
* புறக்கணிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட மக்கள், வறுமை, அறியாமை, தாழ்வுமனப்பான்மை போன்றவைகளால் தவறானவர்களின் கைகளில் சிக்கிவிடும் அபாயம். தேசவிரோத சக்திகள் இவர்களை பயன்படுத்திக்கொள்ளும் போக்கு, மதமாற்றம் என்ற கொடிய சமூக நோயால் நமது பண்பாட்டிலிருந்து முற்றிலும் தொலைந்து போகும் அவலம்.
இதுபோன்ற பல காரணங்களால் தான் மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைத்து நல்ல முறையில் ஊக்கமும் ஆக்கமும் தந்து தேசத்திற்கு வலிமை சேர்க்கும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.
கல்வியில் சக்ஷம்:
ஏழ்மை நிலையில் உள்ள படிக்கும் ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகளான பல மாணவர்களை கண்டறிந்து படிப்பிற்கு வேண்டிய உதவிகளை அளித்து வருகிறது.
தொழில்களில் சக்ஷம்:
பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பின்றி தவித்த பல மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஷம் சார்பாக திருப்பூர் பனியன் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டது. படித்த மாற்றுத் திறனாளர்களுக்கு அவர்கள் படிப்பிற்கேற்ப பல நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. தையல் பயிற்சி, ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி போன்றவையும் அளிக்கப்படுகின்றன. சிலர், சக்ஷம் அகர்பத்திகள் என்ற பெயரில் அகர்பத்திகள் தயாரித்து செய்து விற்று வருகின்றனர்.