சீக்கிய குரு குருநானக் தனது கடைசி காலத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் வசித்தார் என்பதால் இது குருநானக்கின் இறுதி ஓய்வு இடமாக புனிதமாக கொண்டாடப்படுகிறது. முதல் சீக்கிய குருவான அவர் இங்கு 12 ஆண்டுகள் வசித்தார்.
அவர் மெக்காவுக்கு சென்ற போது அவருக்கு அளிக்கப்பட்ட உடைகள் இங்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. அருகிலேயே குருத்வாரா தாலி சாஹிப் என்ற இடமும் இருக்கிறது.
தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கர்தார்பூர் இருக்கிறது. ஆண்டுதோறும் சீக்கிய மதத்தினர் இங்கு வழிபாட்டுக்கு செல்வார்கள் என்பதால் பாரத அரசு நமது பஞ்சாபில் இருந்து சர்வதேச எல்லை வழியாக 4.7 கிலோ மீட்டர் நீளமுள்ள பாதையை அமைத்து, யாத்ரீகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.
சீக்கிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்யக்கோரி பாகிஸ்தான் அரசையும் வலியுறுத்தியது. பாதையை திறக்க பாகிஸ்தான் அரசு போட்ட பல தடைகளையும் தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் வெற்றி கொண்டது பாரதம்.
ஒருவழியாக 2019-ல் பாகிஸ்தான் வழிக்கு வந்ததுடன், பாரதத்தில் இருந்து செல்லும் சீக்கியர்களுக்கு விசா வழங்கியது. கோவிட் விதிமுறைகளின் படி கர்தார்பூர் நடைபாதை விரைவில் திறக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2019-ல் கர்தார்பூர் சாலை திறக்கப்பட்ட தினம் இன்று.