ஒருநாள் சுவாமி விவேகானந்தர் உள்பட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்கள் 16 பேர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் காலமான பிறகு இவர்கள் ஆலம் பஜார் என்ற இடத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் தங்கியிருந்தனர். உணவுக்கு மிகுந்த கஷ்டம். யாராவது ஒருவர் தினசரி சென்று பிச்சை எடுத்துவர வேண்டும். சில நேரங்களில் காய்ந்த ரொட்டிகள் தான் பிச்சையாக கிடைக்கும். சில நேரங்களில் அதுவும் கிடைக்காது. பல நாட்கள் பட்டினி.
ஒருநாள் சீடர்களில் ஒருவரான யோகானந்தர் பிச்சைக்குக் கிளம்பினார். ஆலம் பஜார் பகுதியில் ஒரு வீட்டின் முன் வந்து நின்றார். அந்த வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்த வேலைக்காரப் பெண் இளம் துறவியைக் கண்டதும் கோபத்தோடு, “நீ இளைஞன்தானே… உழைத்துச் சாப்பிடத் தெரியாதா? போ…. வெளியே” என்று கத்தினாள். பகலில் சந்நியாசி வேடத்தில் வந்து பிச்சை எடுப்பது போல் நோட்டமிட்டு இரவு வந்து திருடுவதுதானே உங்கள் தொழில் என்றெல்லாம் திட்டித் தீர்த்தாள். இதையெல்லாம் பொறுமையாக வேடிக்கைப் பார்த்த யோகானந்தர் பதில் எதுவும் பேசாமால் அமைதியாகத் திரும்பினார்.
அன்று யோகானந்தர் மடத்துக்குத் திரும்பியதும் அந்தப் பெண் செய்ததையும் திட்டியதையும் அப்படியே நடித்துக் காட்டினார். அவரும் சக துறவிகளும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதுதான் உண்மையான துறவியின் இலக்கணம்.