மணிப்பூரில், ஆளும் பா.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, காங்., கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், பா.ஜ., வெற்றி பெற்றது.
வடகிழக்கு மாநிலமான, மணிப்பூரில், முதல்வர் பிரேன் சிங் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், 21 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்தது.
கடந்த, ஜூன் 17ல், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள், திரிணமுல் காங்., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் தலா ஒருவர், ஆளும் பா.ஜ.,வுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டனர். அதேசயம், பா.ஜ.,வில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.,க்கள் காங்.,கில் இணைந்தனர்.
இதையடுத்து, பா.ஜ.,வுக்கு எதிராக நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருவதற்கு, காங்., அளித்த தீர்மானத்தை எடுத்துக் கொள்ள, மணிப்பூர் சட்டசபை செயலாளர் ரமணிதேவி மறுத்துவிட்டார். அதேசமயம், பா.ஜ., சார்பில், முதல்வர் பிரேன் சிங் கொடுத்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.
நேற்று ஒரு நாள் கூடிய சட்டசபையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம், இரவு வரை நீண்டது. பின்னர் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், பா.ஜ., 28 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. பா.ஜ.,வுக்கு எதிராக, 16 ஓட்டுக்கள் பதிவானது.காங்.,கை சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.,க்கள், கூட்டத்தை புறக்கணித்தனர்.