பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டதால், கொச்சி விமான நிலையத்தில் வடை, காபி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
கொச்சி விமான நிலையத்தில், டீ, காபி மற்றும் தின்பண்டங்கள் எதை எடுத்தாலும் குறைந்தது நூறு ரூபாயாக இருந்தது. இந்நிலையில், விமான நிலையத்துக்கு வந்த பயணிஷாஜி கோடன்கண்டதில், உணவுப் பொருட்களின் விலைகளைபார்த்து அதிருப்தி அடைந்தார். அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுவது குறித்து உடனடியாகப் பிரதமர்மோடிக்கு கடிதம் அனுப்பினார்.
இதுகுறித்து கொச்சி சர்வதேச விமான நிலைய தகவல் தொடர்பு (சிஐஏஎல்) மேலாளர் பி.எஸ்.ஜெயன் கூறும்போது, ‘‘உணவுப் பொருட்களின் விலைகளை கடந்த ஆண்டே குறைத்துவிட்டோம். டீ, காபி,தின்பண்டங்களின் விலைகள் ஒவ்வொன்றும் ரூ.30 ஆக குறைத்துள்ளோம். தற்போது அந்தவிலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது’’ என்றார். அதன்படி, வடை, வாழைப்பழத்தில் செய்யப்படும் பழம்பொரி போன்றவை ரூ.15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷாஜி கூறியதாவது: கடந்த ஆண்டு கொச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றேன். அப்போது பிளாக் டீ வாங்கினேன். அதற்குரூ.100 கேட்டனர். பேப்பர் கப்ஒன்றில் சுடு தண்ணீர் ஊற்றி, டீ பாக்கெட் போட்டு கொடுப்பதற்கு நூறு ரூபாயா என்று கேட்டேன். அதற்கு, ‘‘இந்தக் கடையைலட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறேன். அதனால் வேறு வழியின்றி அதிக விலைக்கு விற்கவேண்டியிருக்கிறது என்று கடைஉரிமையாளர் கூறினார். அத்துடன், பிஸ்கெட் போன்ற பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் கூட,அதிகபட்ச சில்லறை விலைக்கும் (எம்ஆர்பி) அதிகமாக விற்பதைப் பார்த்தேன். இது அதிர்ச்சியாக இருந்தது. விமானம் புறப்படும் நேரத்துக்கு முன்பு விமான நிலையத்துக்கு வழக்கமாக 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன்னதாக பயணிகள் வந்துவிடுகின்றனர்.
ஆனால், அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.இதுகுறித்து கொச்சி விமானநிலைய அதிகாரிகள் மற்றும்விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் கவனத்துக்குகொண்டு சென்றேன். ஆனால்,எனக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன். அதற்கு உடனடியாக பதில் வந்தது.
பிரதமர் மோடி இணையதளத்தை 2 நாட்களுக்கு முன்னர்பார்த்தேன். அதில், கொச்சி விமான நிலைய மூத்த மேலாளர் ஜோசப் பீட்டர் கையெழுத்திட்டு வெளியிட்டிருந்த கடிதத்தைப் பார்த்தேன். அதில், கொச்சி விமான நிலையத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. டீ, காபி உட்பட பலபொருட்களின் விலை ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் எம்ஆர்பி விலைக்கு விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கொச்சி விமான நிலையத்தைப் போல நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களிலும் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். இவ்வாறு ஷாஜி கூறினார்.