கை துண்டிப்பு வழக்கில் தொடர்புடைய முகமது அலி உட்பட 6 பேர் தங்க கடத்தல் வழக்கில் கைது

கேரளாவின் தொடுபுழாவில் செயல்படும் கல்லூரியில் கடந்த 2010-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில் இஸ்லாமிய மதம் தொடர்பான சர்ச்சையான கேள்வியை தயார் செய்ததாக பேராசிரியர் ஜோசப் மீது புகார் கூறப்பட்டது.

ஆத்திரமடைந்த ஒரு கும்பல், கடந்த 2010 ஜூலை 4-ம் தேதி அவரது வலது கையை வெட்டியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்ட முகமது அலி, தற்போது கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த ஜூன் 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த கடத்தல் வழக்கில் ஹவாலா, தீவிரவாத தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்காரணமாக தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

துபாய் முதல் திருவனந்தபுரம் வரை தங்க கடத்தல் பின்னிப்பிணைந்திருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா எனபல்வேறு மாநிலங்களில் கடத்தல்தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், பேராசிரியர் ஜோசப் கை துண்டிப்பு வழக்கில் தொடர்புடையஎர்ணாகுளத்தை சேர்ந்த முகமது அலி மற்றும் இப்ராஹிம், ஜலால், ஆலவி, முகமது ஷபி, அப்டு ஆகிய 6 பேரை என்ஐஏஅதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.