நானே பாரதம்

கருணை காட்டுவதில் மேகம் போன்றவள் நான்

கவிதை படைப்பதில் அருவி போன்றவள் நான்

அன்பெனும் பண்பில் பரந்து விரிந்தது என் இதயம்

பாசம் என்ற குணத்தில் அகன்று நிற்பது என் உள்ளம் !

 

உள்ளத்து உறுதியில் உயர்ந்தவள் நான்

ஒற்றுமை என்பதை உலகுக்கு உணர்த்தியவள் நான்

பல விந்தைகளை என்னுள் கொண்டவள் நான்

பல வித்தைகளை உலகுக்கு அளித்தவள் நான்!

 

கொஞ்சி கொஞ்சி மகிழும் குழந்தை நான்

சிந்தும் சிரிப்பில் பனிச்சாரல் நான்

தந்து மகிழ்வதில் கார் மேகம் நான்

வந்தோரை வாழ வைக்கும் அன்னை நான்!

 

கண்களால் காண்பதில் கருணை நான்

காதுகளால் கேட்பதில் சமத்துவம் நான்

வாயால் பேசும் போது நாகரீகம் நான்

கைகளை நீட்டும் போது நேசம் காட்டுபவள் நான்!

மூன்று கடல்களால் சூழப்பட்ட கவிதை நான்

இமயத்தைத் தலையாய் கொண்டவள் நான்

மடிசாய இடங்கொடுக்கும் அன்னை நான்

துயரில் தோள் கொடுக்கும் துணையும் நான்!

 

வீரத்தின் விளை நிலம் நான்

தியாகத்தின் திரு உருவம் நான்

வீரராய் புதல்வரை ஈன்றவள் நான்

வெற்றி ஒன்றையே பழகியவள் நான்!

 

சோம்பலை மறந்து சுய நலத்தைத் துறந்து,

சாதனை வானில் பறந்து உலகின் குருவாய் உயர்ந்து

ஏற்றமிகு பல செயல்கள் செய்து,

என்றும் எங்கும் நிலைத்திருப்பவள் நான்!

 

சூரியன் நான் சுற்றிப் பார்த்த இடம்

நிலவு நான் நின்று வந்த இடம்

செவ்வாய் நான் சென்று வந்த இடம்

புதன் எனக்குப் புதிதல்ல

வியாழனும் எனக்கு விந்தையல்ல

வெள்ளி நான் விளையாடிய இடம்

சனி நான் பணி செய்த இடம்

வானியலின் அனைத்து உண்மையும்                              அறிந்தவள் நான்!

 

புரிகிறதா என்னை? தெரிகிறதா என்னை?

நானே பாரதம்! நானே பாரதம்!