சமுதாய நல்லிணக்க நாயகர்கள்

தற்போது சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகப் பாடுபடுவதாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் பலர், இத்திருடனைப் போன்று அந்தந்த சமூகத்தில் பிளவையும் துவேஷத்தையுமே ஏற்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் “All are Equal” என்ற மேற்கத்திய சிந்தனை. ஆனால் நம் முன்னோர்கள் “All is one” என்றனர். இறைவனின் படைப்பில் மனிதப்பிறவி உட்பட ஒன்றாக, இறைவடிவமாகப் பார்க்கும் அணுகுமுறையை நம் முன்னோர் ஏற்படுத்தினர். இந்த சிந்தனை மாறும்போது ஜாதிவாரி, மொழிவாரி பிரிவினையானது காட்டுத்தீ போல் பரவுகிறது.

ஹிந்து சமுதாயம் பலவீனமாக இருந்தபோது, சிறு சிறு வித்தியாசங்களைப் பெரிதாக்கினர். ஒற்றுமைப்படுத்தும் விஷயத்தை யோசிக்கவில்லை. இருவர் சண்டையிடும்போது 3ம் நபர் (கிறிஸ்தவர், முஸ்லிம், வெளிநாட்டவர்) லாபமடைந்தனர்.social2

உதாரணம், குழந்தைக்குப் பெயர் வைப்பதில் கணவன், மனைவிக்குள் சண்டை. தங்களது தந்தை பெயரான சிவசாமியா, கிருஷ்ணசாமியா என்று சண்டை. எதிர் வீட்டுக்காரர் சமாதானம் செய்து,  சிவராம கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தார். தனது தந்தை பெயரான ராமசாமியை நடுவில் நுழைத்துவிட்டார்.

சமுதாய நல்லிணக்கம் (ஸாமாஜிக் சமரஸதா) என்பது அனைத்தையும் ஒன்றாகப் பார்ப்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி சிந்திப்பது. இப்படி சிந்தித்து சமுதாய ஒற்றுமைகாகப் பாடுபட்டவர்கள் பலரது பெயர் வெளிவரவே இல்லை. ஆனால் சுயநலத்தோடு பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்ட ஈ.வெ.ரா. போன்றோர் ஆதாயமடைந்தனர். விளம்பரமின்றிப் பாடுபட்ட பெரியோர்களைப் பற்றி (Unsung Heroes) இந்நேரத்தில் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

ரங்கசாமி நாயக்கர்

பாண்டிச்சேரி அருகே காரைக்காலைச் சேர்ந்தவர். 18,19ம் நூற்றாண்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகக் கோயில்கள் கட்டியவர். திருநள்ளாரு பகுதி மேயராக இருந்தவர். “France Indian காந்தி” எனப் பாராட்டப்பட்டவர்.

மதுரை வைத்யநாத ஐயர்

ஹரினஜ சேவக் சங்கம்” துவங்கிய அப்பழுக்கற்ற காந்தியவாதி. பிரபலமான வக்கீல்.  அவரத்ய் சங்கம் துவங்குவதற்கு முன்பே, மதுரை மீனாட்சி கோயிலில் ஹரிஜன மக்களுடன் நுழைந்து அவர்களும் வழிபடக் காரணமானவர். இன்றும் அவரது சிலையை மீனாட்சி கோயில் நுழைவின் முன்பு காணமுடியும். மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்டவர். ஐயர் மறைந்தபின் ஹரிஜன சேவக் சங்கம் அவரைப்பற்றிப் புத்தகம் வெளியிட்டது. தவிர ஐயரின் முயற்சியால் 1930ல் தமிழக சட்டசபையில் ஆலயப் பிரவேச சட்டம் இயற்றப்பட்டது.

மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா

பலரது எதிர்ப்பையும் மீறி ஷெட்யூல்டு வகுப்பினர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படிக்கப் பாடுபட்டவர். அண்ணல் அம்பேத்கரைப் போன்று ஹிந்து மதத்தில் தீவிரப் பற்று வைத்திருந்தார்.

மதமாற்றத்தைக் கண்டித்ததோடு அதன் மூலம் தீண்டாமை ஒழியாது என்றும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையைக் காட்டிலும் முக்கியமானது ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.

ஹிந்து மேல் ஜாதிக்காரர்களின் ஆதிக்க மனப்பான்மையைக் கடுமையாகக் கண்டித்தார். அதே நேரத்தில், ஆதிசங்கரர் முன்பு சண்டாளன் வடிவில் தோன்றி இறைவனே அத்வைத தத்துவத்தை உணர வைத்தது, முந்தைய காலத்தில் கோயில் சொத்துத் தகராறு போன்றவற்றில் பறையர் எனப்படுவோர் நீதிபதிகளாக இருந்தது, 18ம் நூற்றாண்டு காலத்தில் திருவாரூர் தியாகராஜர் போன்ற கோயில் உற்சவங்களில் பறையர் வகுப்பினர் உற்சவர் வீதிவலம் வரும்போது யானை மீது அமர்ந்து உடன் வந்தது போன்ற வரலாற்று உண்மைகளைக் கூறி மேல் ஜாதியினர் மத்தியில் இருந்த தீண்டாமை சிந்தனையைப் போக்கினார்.

இதே போன்று ஹிந்து மதத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்குக் கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இருந்த மரியாதையைப் புரியவைக்கப் பாடுபட்ட ஹிந்து மகாசபையைச் சேர்ந்த தலைவர்களான டாக்டர் முஞ்சே, லாலாலஜ்பத் ராய் போன்றோருடன் எம்.சி. ராஜா ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.

இரட்டைமலை சீனிவாசன்

அனைவராலும் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டார். காரணம் ஓய்வொழிவின்றி ஷெட்யூல்டு வகுப்பினரின் கலாசார மேன்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சியே. டாக்டர் அம்பேத்கருடன் வட்டமேஜை மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

ஷெட்யூல்டு வகுப்பினரை தாழ்த்தப்பட்டவர் (தலித் என்று இன்று அழைக்கப்படுதல்) என்று அழைப்பதைக் கண்டித்தார். மாறாக, உயர்ஜாதியினர் மத்தியில் உள்ள தீண்டாமை நோயை ஒழிக்க அவர்கள் முயற்சிப்பதால் அவர்களைப் புரட்சிகர ஹிந்துக்கள் என்றழைக்க வேண்டும் என்றார். ஆரிய மற்றும் தமிழ்ப் பாரம்பரியங்கள் ஒன்றே என்றார். மதமாற்றம் தீண்டாமைக்குத் தீர்வில்லை என்று புரியவைத்தார்.

வி.ஐ. முனிஸ்வாமி பிள்ளை

மூதறிஞர் ராஜாஜியின் மந்திரி சபையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர். ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த ஆலய நுழைவுச் சட்டத்தை மேல்ஜாதியினர் எதிர்ப்பையும் மீறி மனப்பூர்வமாக ஆதரித்தார். இந்தக் கூட்டத்தின் மூலம் ஹிந்து மதத்தின் மீது இருந்த கரும்புள்ளி அகன்று அதன் புனிதத்தன்மை காப்பாற்றப்பட்டுள்ளது என்றார். பசுப்பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பசுவதையைத் தடுக்கும் சட்டப்பிரிவு 48ஐ வரவேற்றார்.

டாக்டர் அம்பேத்கரால் இந்திய அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்டபோது, ஷெட்யூல்டு வகுப்பில் இருந்த நந்தனார் (சைவம்), திருப்பாணாழ்வார் (வைணவம்), திருக்குறளை அளித்த திருவள்ளுவர் போன்றோர் தோன்றிப் பெருமை சேர்த்தது போல, டாக்டர் அம்பேத்கரால் ஹரிஜன மக்கள் மட்டுமின்றி இந்தியத் திருநாடே பெருமைப்படுகிறது என்றார்.

பி.எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்

புகழ்பெற்ற வழக்கறிஞர். காந்தியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர். தனது சொத்துக்களை ஹரிஜன மக்களுக்கான தொண்டுப் பணிக்காக அர்ப்பணித்தார். ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்கள் சட்டப்பதிப்பு படிக்கத் தூண்டுகோலாக இருந்தார். ஒரு ஷெட்யூல்டு வகுப்பு இளைஞனை தனது மகனாகவே ஏற்றுக் கொண்டார். அவனது திருமணத்தின்போது தம்பதிகள் இருவரையும் இரண்டு குதிரைகள் பூட்டிய ரதத்தில் நகரம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்தார். ஹோட்டல்களில் அவர்களுக்கும் பரிமாற வைத்தார். இதனால் அவர் ஹரிஜன ஐயங்கார் என்றே அழைக்கப்பட்டார்.

ஸ்வாமி சகஜானந்தர்

1903ல் திண்டிவனத்தில் ஒரு கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளியில் முனுசாமி என்ற இளைஞன் படித்தான். பள்ளி நிர்வாகம் புத்திசாலியான முனுசாமியைக் கட்டணமின்றி மதிய உணவு வேண்டுமென்றால் மாறும்படியும் மறுத்தால் உணவுக் கட்டணம் கட்டும்படியும் கூறியது. முனுசாமி இரண்டையுமே மறுத்துப் பள்ளியிலிருந்து வெளியேறினான்.

ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த முனுசாமி பின்னர் ஒரு நிலச் சுவான்தாரிடம் தொழிலாளியாக வேலை செய்து வந்தான். ஒருநாள் அக்கிராமத்திற்கு வந்த நீலமேக ஸ்வாமி என்ற சந்நியாசி முனுசாமியிடம், தம்பி, நீ யார்?‘’ என்று கேட்க, அவன், ‘பரப்பிரம்மம்’ என்றான். அதிர்ச்சியுற்ற அத்துறவி அவனிடம் ஆன்மிக விஷயங்களைப் பரிமாற முனைந்தபோது கிராமத்தினர் தடுத்தனர். எனவே அஸ்தமனத்திற்குப் பின்னர், கிராமத்திற்கு வெளியே இருவரும் சந்திக்கத் துவங்கினர். நீலமேக ஸ்வாமியின் வழிகாட்டுதலில் முனுசாமி, காஞ்சிபுரம் தக்ஷிண ஸ்வாமி என்பவர் மூலம் கரபத்ர சிவபிரகாச ஸ்வாமியை சந்தித்து, சந்நியாச தீட்சை பெற்று  ஸ்வாமி சகஜானந்தராக மாறினார்.

பெண் கல்விக்கும் பாரதீய கலாசார அடிப்படையிலான கல்விக்கும் முன்னுரிமை அளித்து, டிரஸ்ட் மூலம் இருபாலர் பள்ளி நடத்தினார்.

1936 முதல் 1959 வரை சென்னை சட்டசபை உறுப்பினராக இருந்தார். அக்கால கட்டத்தில், சிதம்பரத்தில் சைவ நெறியாளரான நந்தனாருக்கு நினைவு மண்டபம் எழுப்பினார்.

ஈ.வெ.ரா போன்ற திராவிட இயக்கத்தாரின் வினாயகர் சிலை உடைப்பு போன்றவற்றை எதிர்த்து சட்டசபையில் குரல் எழுப்பினார். ராஜாஜியின் ஆலய நுழைவுச் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.

மதமாற்றம், கடவுள் மறுப்பு போன்றவை தடுக்கப்பட ஷெட்யூல்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கிறிஸ்தவ, திராவிட இயக்க ஆசிரியர்களைப் பணியமர்த்தக் கூடாது என்றார்.

தமிழகத்தில் தோன்றி ஆர்ப்பாட்டமில்லாமல் சமுதாய நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்ட இந்தத் தலைவர்களைப் போல்,social

ஆந்திரா-ஒடிஸா எல்லைப்பகுதி காட்டுவாசிகளான சவர ஜாதியினரின் மொழி, பாரம்பரியம் போன்றவற்றை மீட்கத்  தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கிடுகு ராமமூர்த்தி, கேரளாவில் நாராயணகுரு, சட்டம்பி ஸ்வாமிகள், மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மகாத்மா ஜோதிராவ் ஃபுலே, கர்னாடகாவில் பசவேஸ்வரய்யா, ஸ்ரீமத் ராமானுஜர், (தற்போது 1000வது பிறந்த ஆண்டு), குரு கோவிந்த சிம்மன் என்று இப்புரட்சியாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இவர்கள் அனைவருக்கும் உத்வேகம் கொடுத்தவை ஆழ்ந்த ஹிந்து மதத் தத்துவங்களே. சமுதாயத்தில் வெறுப்பை வளர்க்காமல், நல்லிணக்கம் மேலோங்க தன்னலமின்றிப் பாடுபட்டனர். அதனாலேயெ இவர்களது பெயர் மற்றும் செயல்கள் திராவிட சிந்தனையில் ஊறிய கல்வியாளர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

சமுதாய நல்லிணக்கத்திற்கான சங்க முயற்சி

ராமநாதபுர மாவட்டத்தில் ஜாதிக் கலவரம் அடிக்கடி நிகழ்ந்த காலகட்டத்தில், சங்கத் தொடர்பால் சேதுபதி மகராஜா வம்சத்தைச் சேர்ந்த ஆத்மநாத ஸ்வாமி என்ற பெரியவர் பிற்படுத்தப்பட்டவர்களும் ஆலயத்தில் அனுமதிக்கப்பட்டால்தான் முதல் மரியாதையை ஏற்பேன் என்று கூறி வெளியில் நின்று, ஊர்மக்கள் மனம் மாறக் காரணமானார். ஜனவரி 3, 2016 – புனாவில் நடந்த சிவசக்தி சங்கமத்தில் பூரண கணவேஷில் 1,50,000 பேர் பங்கேற்பு. அதை ஒட்டிய முயற்சிகள்:

* ஜோதிராவ் ஃபுலேயின் 4வது, 5வது தலைமுறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காரணம் ஃபுலெ பிறந்த ஊரில் சாயம் ஷாகா துவங்கியதால்.

* காலாராம் கோயிலுக்குள் அம்பேத்கர் ஊர் மக்களுடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். சங்கத்தின் தொடர்பால், அதே குருக்கள் வம்சத்தில் வந்த தற்போதைய குருக்கள் பாவமன்னிப்பு கேட்டனர்.

போராட்டம் இல்லாமல் அன்பு மூலம் உள்ளங்களை ஜெயிப்பதே சங்கத்தின் முயற்சி.

* கர்நாடகாவில் பெஜாவர் ஸ்வாமிகள் ஒரு பிற்படுத்தப்பட்ட பகுதிக்கு வருவதாக அறிவித்தார். பிற்படுத்தப்பட்ட பகுதி ஸ்வாமி ஒருவர் போட்டியாகத் தான் உயர் ஜாதியினர் பகுதிக்கு வருவதாக அறிவித்தார். சங்கத்தின் முயற்சியால் உயர் ஜாதியினர் அவரை மிகுந்த வரவேற்று உபசரித்தனர். அவரது அணுகுமுறை மாறியது.

* ப.பூ. சர்சங்கசாலக்கின் விஜயதசமி உரையில் கோயில், நீர்நிலை, சுடுகாடு அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று அறிவித்தது.

* 2016 பிரதிநிதிசபாவில் 3 தீர்மானங்களில் ஒன்றாக அன்றாட வாழ்க்கையில் சமரஸதா வலியுறுத்தப்பட்டது.

நமக்குத் தெரிந்த நம்பகுதி உதாரணங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட அமைதியான சமுதாயப் புரட்சியாளர்களைப் பற்றி நாமும் அறிந்து, மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி, சகோதரத்துவம் வளர்க்கும் ரக்ஷா பந்தன் செய்தியை ஒவ்வொரு பஸ்தியிலும்/மண்டலிலும் அதிகமான இடங்களுக்கு பாரத மாதா பூஜை உள்ளிட்ட பல வழிகளில் முயற்சித்து சங்கப்பணி மேலோங்கப் பாடுபடுவோம். வெற்றி நமதே