கழகங்களே – காம்ரேடுகளே, களப்பணி என்ன கடைச்சரக்கா ?

இதற்கு முன்னால் கவனிக்காதவர்களுக்கும் கொரானாவினால்  ஒன்று புரிந்திருக்கும், இயற்கைப் பேரிடரோ, பாக்- சீன படையெடுப்போ, ரயில் விபத்தோ எதுவானாலும் நம் நாட்டு மக்களின் துயர் துடைப்புப் பணியில் முதல் முதலாக சென்று நிற்பது ஆர்.எஸ். எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தான் என்பது.

காஷ்மீர் மீது 1947ல் நாம் சுதந்திரம் அடைந்து 80 நாட்களே ஆன நிலையில், பாகிஸ்தான் நம் மீது வஞ்சகமாக படையெடுத்து வந்தபோது சங்க ஸ்வயம் சேவகர்கள் ராணுவ விமானங்கள் தளவாடங்களைக் கொண்டு இறக்க விமான ஓடுதளம் அமைப்பதில் பங்கு கொண்டது, பின்னர் சீன போரின் போது ஆற்றிய பணிகளை பார்த்து எந்த சங்கத்திற்கு ஊசி முனை நிலமும் கொடுக்க மாட்டேன் என்று துரியோதனனைப் போல கொக்கரித்த நேரு கூட தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு 1963ம் ஆண்டு குடியரசு தின பேரணியில் பங்கு கொள்ள அழைப்பு விடுத்தது, 1967, 1971 பாக் போர்களில் ராணுவத்திற்கும் – உள்ளூர் காவல் துறைக்கும் துணை நின்றது இவற்றையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 1974ல் நான் சங்கத்தில் சேர்ந்த பிறகு நடக்கும் ஒவ்வொரு நிவாரணப் பணியையும் பார்த்த அனுபவம் உண்டு. சிலவற்றில் நேரடியாக பங்கு கொள்ளும் நல்வாய்ப்பினையும் இறை அருளால் பெற்றுள்ளேன்.

எடுத்துக்காட்டுகளாக சில.

1977ல் கிருஷ்ணா ஜில்லா திவி தாலுக்காவில் புயலும், கடல் வெள்ளம் சூழ்ந்ததாலும் ஏற்பட்ட சேதம். நூற்றுக்கணக்கான உயிரிழப்பு. இராணுவத்தினரே வியந்து போகுமளவு பிணங்களை அகற்றி, ஈமச் சடங்குகளை நிகழ்த்தியவர்கள் எளிய ஸ்வயம்சேவகர்கள். 1978ல் திருச்சியில் ஏற்பட்ட காவேரி வெள்ளப் பேருக்கு, 1979ல் குஜராத்தில் மோர்வி அணை உடைந்து சூரத் வெள்ள நிவாரணப் பணி தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பல இயற்கை பேரிடர்கள். 1980 முதல் 1984 வரை பஞ்சாபில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதம், அதன் பிடியிலிருந்து அந்த மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க மேற்கொண்ட முயற்சிகள் என்று பெரிய பட்டியலையே கொடுக்கலாம். அவ்வளவு ஏன், சென்னையில் 2014 ஜூன் மாதம் முகலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததே அங்கு மீட்புப் பணிக்குத் தடையாக இருந்த ஒரு பெரும் தூணை கயிறு போன்ற எளிய உபகாரணகளைக் கொண்டு வழி ஏற்படுத்திக் கொடுத்த பின்னர் தான் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்க முடிந்தது. (இது முதலில் ஹிந்து ஆங்கில பத்திரிகையின் இணைய தள படங்களில் பதிவாகி விட்டது. உடனே பதறிப் போய் நிர்வாகம் அவசர அவசரமாக அந்தப் படங்களை நீக்கியது இன்னொரு தமாஷ் ). சென்ற வருடம்  ஞ்சிபுரம் அத்தி வரதர் ஏற்பாட்டில் கோவிலுக்குள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, வயதானவர்களுக்கு சக்கர நாற்காலி தள்ளியது, இலவசமாக உணவு, சிற்றுண்டி, நீர், மோர் என்றெல்லாம் எத்தனை சேவைப் பணிகள்!

இன்னொரு புறத்தில் பாருங்கள், கழகங்களும் கம்யூனிஸ்டுகளும்! நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் இவர்களின் பங்களிப்பு என்ன? பூச்சியம். அது கூட பரவாயில்லை, அப்பொழுது தான் இவர்கள் போராட்டங்கள் நடத்துவதும், நிலைமையை சிக்கலாக்குவதும் என்று இவர்கள் வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதுமே என்று நம்மை நினைக்க வைப்பார்கள்.

இவர்கள் பார்வையில் களப்பணி என்றால் என்ன தெரியுமா? விவசாயிக்கும் நகரவாசிக்கும் மோதல் ஏற்படுத்துவத, சமூகத்திற்குள் ஒருவருக்கு ஒருவர் வம்பு வளர்ப்பது என்று குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது, உரிமைக்கு போராடு என்று கொம்பு சீவி விட்டு பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவது. உணர்ச்சியைத் தூண்டி விடுவது எளிது, ஆக்க பூர்வமான நிவாரண பணிகளை செய்வது லேசுப்பட்ட விஷயமா என்ன?

அதனால் தான் சொல்கிறோம், கழகங்களே – காம்ரேடுகளே, களப்பணி என்ன கடைச்சரக்கா ?

வேம்படியான்