ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்று பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால்
நமது வாழ்க்கையில் தினமும் ஏதோ ஒரு வகையில் வாய்ப்புகள் நம்மை கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம். வந்திருப்பது வாய்ப்புதான் என்று உணர்ந்து கொள்வதிலும் சிலர் தவறிவிடுகிறார்கள்.
ஒரு சில வேளை களில் காலம் தந்திருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற முயற்சி வேண்டும்.
ஒரு ஊரில் ஒரு பெரிய மாயாஜாலக் கலைஞர் இருந்தார்.
எந்த ஒரு இடத்தில் அவரைப் பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள் அந்த இடத்தில் இருந்து வெளியே வந்து விடுவார்.
ஒருமுறை, அவருடைய கை,கால்களை கட்டி தண்ணீருக்குள் போட்டு அழுத்திய போது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளிவந்தார்.
இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்த போது, அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்குள் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.
அவர் எப்படி இதனை செய்கிறார்?என்ன யுத்திகளை பயன்படுத்துகிறார்? என்பது யாருக்கும் புரியாத புதிர்.
அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக் கோப்பான, யாரும் தப்பிக்கவே முடியாத சிறை ஒன்று இருந்தது.
இதுவரையில் அந்த சிறையில் இருந்து ஒருவர் கூட தப்பித்தது இல்லை.
இதனை அறிந்த அந்த மாயா ஜாலக் கலைஞர், தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும் படியும், ஒருமணி நேரத்தில் நான் வெளி வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு காட்டுகிறேன் என்றும், சவால் விட்டார்.
அதற்கு ஒத்துக் கொண்ட அந்த நாட்டு அரசு அவரை சிறைச் சாலையில் உள்ள ஓர் அறையில்தள்ளி கதவை சாத்தியது.
உள்ளே சென்ற அவர் முதலில் தான், அணிந்து இருந்த இடுப்பு பட்டையில் இருந்து ஒரு கம்பியை வெளியே எடுத்து வைத்து கதவில் இருக்கும் பூட்டைத் திறக்க முயற்சி செய்தார். அரை மணி நேரத்திற்கு மேல் முட்டி மோதிப் பார்த்தும் முடியவில்லை.
ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. முடிய வில்லை. ஒரு நாள் முழுக்க முயற்சி செய்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
களைப்படைந்து விட்டார். எரிச்சலுடன் அந்தக் கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்து கொண்டது.கதவு பூட்டப் படவே இல்லை.
பிரச்சனை என்னவென்றால் அவருடைய எண்ணங்களில் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கண்டிப்பாக நம்மை பூட்டி இருப்பார்கள் என்ற நினைப்பிலேயே பூட்டாத கதவை கம்பியை வைத்து திறக்க முயன்று கொண்டு இருந்தார்.
இப்படித்தான் பலர் எண்ணங்களிலேயே வாய்ப்புகள் இல்லை என்று பூட்டுப் போட்டுக் கொண்டு செய்வதறியாது திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
உங்கள் வெற்றிக் கோட்டையைத் திறப்பதற்காக சாவியை கொண்டு முயற்சி செய்து கொண்டே இருக்காதீர்கள்! ஒருமுறை கோட்டையின் கதவை கைகளால் தள்ளிப்பாருங்கள்! அது ஏற்கனவே திறந்து இருக்கலாம்.
ஆதலையூர் சூரியகுமார்.