2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்டார். சிங்கப்பூரில் 13 நாள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா.
குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பத்தொன்பது வயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இறுதியாக மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என 4-வது முறையாக டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளான கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன, சீராய்வு மனுக்களும், மறுஆய்வு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து தூக்கு தண்டனைக்கு முதல்நாளான நேற்று கூட குற்றவாளிகளில் 3 பேர் அக்சய் குமார், பவன் குப்தா, முகேஷ் ஆகிய 3 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மாறி, மாறி மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை நிறுத்தி வைக்க முயன்றனர். ஆனால், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இறுதியாக டெத் வாரண்டை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்த மனுவும் இரவு விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை குற்றவாளிகள் 4 பேருக்கும் நிறைவேற்றப்படுவது உறுதியானது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. குற்றவாளிகள தூக்கிலிடுவதற்காக உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹேங்மேன் பவான் ஜலாத் வரவழைக்கப்பட்டிருந்தார்.