தூத்துக்குடியில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1.70 கோடியில் நிறுவப்படும் என்று அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசியபோது அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
தென்காசி மாவட்டத்தில் ரூ.2.70 கோடியில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம், தருமபுரியில் ரூ.2.12 கோடியில் கருப்பு செம்மறியாட்டின ஆராய்ச்சி நிலையம், சென்னை அருகேயுள்ள காட்டுப்பாக்கத்தில் ரூ.2.85 கோடியில் சிவப்பு செம்மறியாடு உள்ளீட்டு மையம், நாமக்கல்லில் ரூ.1.48 கோடியில் சேலம் கருப்பு வெள்ளாட்டின பண்ணை புதிதாக நிறுவப்படும். ஒரத்தநாட்டில் ரூ.2.54 கோடியில் விலங்குவழி பரவும் நோய்கள் ஆய்வகம் அமைக்கப்படும்.
தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து மூலம் ரூ.2 கோடியில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தம் திட்டம் செயல்படுத்தப்படும். கால்நடை பராமரிப்பில், ஆய்வின் மூலம் பயனுள்ளதாக அறியப்படும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் பண்ணையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்த ஆண்டில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1.70 கோடியில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்படும். இதன்மூலம் இம்மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்கள் பயனடைவர்.
இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தில் 12 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.4.10 கோடியில் கன்றுகளைப் பராமரிக்கத் தேவையான மருந்துப் பெட்டிகள் வழங்கப்படும். மாநிலத்தில் பசுந்தீவனம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக தீவன சோளம், காராமணி, கோ (எப்எஸ்) 29, வேலிமசால் அடங்கிய விலையில்லா தீவன விதைத் தொகுப்புகள் ரூ.12 கோடியில் 3 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 22 அறிவிப்புகளை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.