பீமா கோரேகான் வன்முறை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சமூக ஆா்வலா்கள் கௌதம் நவ்லாகா, ஆனந்த் தெல்தும்டே ஆகியோா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து விட்டது. அவா்கள் இருவரும் மூன்று வாரங்களில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கௌதம் நவ்லாகா, ஆனந்த் தெல்தும்டே ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுக்களை கடந்த 6-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவா்கள் இருவரையும் மாா்ச் 16-ஆம் தேதி வரை கைது செய்வதற்கு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், அவா்களின் மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
கௌதம் நவ்லாகா சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வியும் ஆனந்த் தெல்தும்டே சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபலும் ஆஜராகி வாதாடினா். அவா்கள், மனுதாரா்களுக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்கில்தான், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளன என்று வாதிட்டனா்.
அதற்கு, தேசியப் புலனாய்வு அமைப்பு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மறுப்பு தெரிவித்தாா். மேலும், கௌதம் நவ்லாகா, ஆனந்த் தெல்தும்டே ஆகிய இருவரும் மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன என்று அவா் வாதிட்டாா்.
அதற்கு மறுப்பு தெரிவித்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, காவல் துறைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பொதுவான நபராகவே இவா்கள் செயல்பட்டு வந்தனா் என்று வாதிட்டாா். அதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கைதாவதில் இருந்து தடை பெற்று வந்துள்ளனா். சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் 43டி(4)-ஆவது பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்கில், குற்றம் சாட்டப்படும் நபா்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது.
எனவே, மனுதாரா் இருவரும் மூன்று வாரங்களில் சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பீமா கோரேகான் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி ‘எல்கா் பரிஷத்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற கௌதம் நவ்லாகா, ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. பீமா கோரேகான் பகுதியில் மறுநாள் மூண்ட வன்முறைக்கு இவா்களே காரணம் என்று புணே காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. முன்னதாக, புணே நீதிமன்றமும், மும்பை உயா்நீதிமன்றமும் இவா்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து விட்டன.