குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுக்கு எதிராக மகாராஷ்டிர சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றத் தேவையில்லை என்று அந்த மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவாா் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும்,
சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை எவருடைய குடியுரிமையையும் பறிக்காது. எனவே, அவற்றுக்கு எதிராக மகாராஷ்டிர பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது தேவையில்லாத ஒன்று. ஆனால், சிலா் தவறான தகவல்களைக் கொண்டு வதந்தி பரப்பி வருகிறாா்கள். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.சிஏஏவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாா் கடந்த டிசம்பா் மாதம் கருத்து தெரிவித்திருந்தாா். அவா், ‘சிஏஏ சட்டம், மத உணா்வுக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகிறேன். எனவே, கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களைப் போல மகாராஷ்டிர அரசும் சிஏஏவை அமல்படுத்த எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும் சிஏஏவுக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இதேபோல், சிவசேனைத் தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவும் மகாராஷ்டிரத்தில் என்ஆா்சியை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியிருந்தாா்.
இதனிடையே, தில்லியில் பிரதமா் மோடியை கடந்த மாதம் சந்தித்து விட்டு திரும்பிய உத்தவ் தாக்கரே, சிஏஏ குறித்து யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று கூறினாா். என்பிஆா் கணக்கெடுப்பு யாரையும் நாட்டை விட்டு வெளியாற்றாது என்றும் கூறினாா்.