புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்து, ஓராண்டு ஆன நிலையில், அதில் உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஆண்டு, பிப்ரவரி, 14ல், ஜம்மு – காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிரிழந்தனர். அந்த கொடூர தாக்குதல் நடந்து, நேற்றுடன் ஓராண்டு ஆனது. அதன், முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதில், உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, அரசி யல் தலைவர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி, வெளியிட்ட, ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருந்ததாவது:கடந்த ஆண்டு, நடத்தப்பட்ட கொடூரமான புல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்துகிறேன். நம் தேசத்திற்காக பணியாற்றி, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அவர்கள், விதிவிலக்கான நபர்கள். அவர்களின் தியாகத்தை, இந்தியா ஒருபோதும் மறக்காது.இவ்வாறு, அதில் குறிப்பிட்டிருந்தார்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், டுவிட்டரில், ”கடந்த ஆண்டு, இதே நாளில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்களை நாம் நினைவுகூர்வோம். ”பயங்கரவாதத்திற்கு எதிராக, ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக நிற்கிறது,” என, பதிவிட்டு உள்ளார்.இவர்களைத் தவிர, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஹர்தீப் சிங் பூரி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்ளிட்ட பல தலைவர்கள், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
நினைவு சுவர்
புல்வாமா தாக்குதலில், உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இங்குள்ள லேத்போரா கிராமத்தில், நினைவுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்து வைக்கப்பட்ட அந்தச் சுவரில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்களின் படங்கள், பெயர்களுடன் பொறிக்கப்பட்டுள்ளன. மூத்த சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள், வீரர்கள் என பலரும், கண்ணீர் மல்க அந்த நினைவுச் சுவருக்கு முன் நின்று மரியாதை செலுத்தினர்.
பெங்களூரை சேர்ந்த பாடகர் உமேஷ் கோபிநாத் ஜாதவ் என்பவர், உயிரிழந்த, 40 சி.ஆர்.பி.எப்., வீரர்களின் வீடுகளுக்கும் சென்று, அங்கிருந்து மண்ணை எடுத்து வந்துள்ளார். சுமார், 61 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்த அவர், 16 மாநிலங்களுக்குச் சென்று, உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றார். விரைவில் கட்டப்படும் நினைவிடத்திற்கு, அந்த மண் பயன்படுத்தப்படவுள்ளது.