பில்வ மங்களர் என்பவர் பல ஆண்டுகள் காட்டில் தங்கி தவம் செய்தார். தவ வாழ்க்கையில் தான் வெற்றி பெற்றதாகக் கருதி துறவியானார். பிறகு பல நகரங்களுக்குச் சென்றார். ஒருநாள் ஒரு வணிகனின் மனைவியைப் பார்த்து அவரது அழகில் மயங்கினார். துறவுக்கு முன்னால் அவரிடம் இருந்த ஆசைகள் மீண்டும் வெளிப்பட்டன. அந்தப் பெண்ணின் பின்னேயே சென்று அவரது வீடு வரை சென்றார்.
வீட்டில் இருந்த அவரது கணவன், துறவியைப் பார்த்து, ஐயா… வாருங்கள்… தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அந்தப் பெண்ணின் மோகத்தில் மயங்கிய பில்வ மங்களர், உங்கள் மனைவியைக் காண விரும்புகிறேன்” என்றார்.
‘கடவுளே… இதென்ன சோதனை. நானும் என் மனைவியும் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் இந்த மனிதர் இவ்வாறு கேட்கிறாரே’ என்றவர், கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தனது மனைவியை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் பெண்மணி, சுவாமிஜி நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டாள்.
அம்மா, இரண்டு ஊசிகள் தாருங்களேன்” என்றார்.
அந்தப் பெண்மணி இரண்டு ஊசிகளைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
துறவி அந்த ஊசிகளை வாங்கி தொலையுங்கள் அயோக்கியர்களே… இனி நீங்கள் எதையும் காண முடியாது” என்றபடியே திடீரென தன் இரண்டு கண்களில் குத்திக்கொண்டார். அவரது இரண்டு கண்களும் குருடாயின.
மீண்டும் அவர் காட்டிற்குத் திரும்பினார். அழுதார், கண்ணீர் சிந்தினார். கடுமையான தவத்தில் மூழ்கினார். அவருக்கு கண்ணனின் காட்சி கிடைத்தது. அந்தப் பெண்ணையே தனது குருவாக வணங்கி பல பக்திப் பாடல்களை எழுதினார்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்