யாருக்கு எதிராக போராடுகிறோமே என்று தெரியாமல் பலர் போராடுகின்றனர் – யோகி ஆதித்யநாத்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்” என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கோரக்பூர் மாவட்டத்தில் செவிலியர் பயிற்சிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். போராட்டங்கள் என்ற பெயரில் நம் நாட்டிற்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

 

அறிவாளிகள் என கூறிக்கொள்ளும் சில நபர்கள் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து பொய்களை பரப்பி மக்களை தவறாக வழிநடத்திச் செல்கின்றனர். நாட்டில் அமைதியின்மையை உருவாக்கவே இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

தாங்கள் யாருக்கு எதிராக போராடுகிறோம் என்றே தெரியாமல் பெரும்பாலானோர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவது நமக்குப் புரிகிறது. நாம் அனைவரும் இதற்கு முடிவுகட்ட வேண்டும். இதுபோன்ற மக்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பர். இவ்வாறு அவர் பேசினார்.