திருப்பாவை – 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்ந்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயண மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ    
தேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்!
விளக்கம்:
ஆறாவது பாசுரத்தில் இறையனுபவத்துக்குப் புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்தப் பாசுரத்தில் இறையனுபவத்தில் தோய்ந்த   பெண்ணையே எழுப்புகிறார்கள். ஆயினும்..இந்த ஆரணங்கோ அவ்விறையனு பவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்தக்  கேசவனின் . . பெருமையை எடுத்து சொல்லியும் எழுப்புகிறார்கள்.
மதி கெட்டு, பேய் போன்று பொழுது விடிந்த பின்னரும் தூங்கும் பெண்ணே, காலைப் பொழுதில் இரை தேடுவதற்காக வெளியே புறப்பட்டு செல்லவிருக்கும் வலியன் குருவிகள், தாங்கள் பிரிய வேண்டிய நிர்பந்தத்தை வெளிப்படுத்தி ஒன்றுக்கொன்று கீசுகீசு என்று தங்களுக்குள்ளே பேசுவது கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம். திருஆய்பாடியில் ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே… தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர்கடைவதை தடுத்து விடுவானே.. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும் அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாகக் கடைந்தார்களோ…அதுபோன்று  வேகம் செலுத்திக் கைநோக  மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைவதால் அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது.
இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய் ??
உனது காதுகளுக்கு இவை எட்டவில்லையா??? தலைவியாக இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டிய பெண்ணே, நாராயணனாகிய கண்ணன், குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரைனைக் கொன்ற வெற்றியை புகழ்ந்து நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்னரும் நீ படுக்கையில் படுத்தவாறே இருக்கின்றாயே, கண்ணனின் மீது மிகுந்த அன்பு கொண்டவளாக இருக்கும் நீ, வெளியே வந்து கண்ணனின் வெற்றியைக் கொண்டாடாமல் படுக்கையில் கிடக்கலாமா, நமது விரோதி கேசி ஒழிந்துவிட்டான் என்ற நிம்மதியில் பயம் ஏதுமின்றி உறங்குகின்றாயா, ஒளி மிகுந்த முகத்தினை உடையவளே வந்து வாயில் கதவினை திறப்பாயாக!