புதுடெல்லி: கடந்த 2013-ம் ஆண்டில் ‘பெல்ட் அன்ட் ரோடு’ திட்டத்தை சீனா தொடங்கியது. இதன்படி மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் பணிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 154 நாடுகள் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சீனாவின் ‘பெல்ட் அன்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்தஇலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடன் சுமை தாங்காமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதன்காரணமாக பெல்ட் அன்ட் ரோடு திட்டம் முடங்கியிருக்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சீனாவை முழுமையாகப் புறக்கணித்து வருகின்றன.
தற்போதைய சூழலில் வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுடன் சீனா நட்பு பாராட்டி வருகிறது. இதற்கும் பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை இணைத்து ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவை அமெரிக்கா, இந்தியாவின் பக்கம் பிரதமர் மோடி திருப்பியிருக்கிறார்.
அமெரிக்கா, சவுதி உறவு: அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் நிருபர் ஜமால் கஸோகி படுகொலைக்கு சவுதி இளவரசர் சல்மானே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியதால் அமெரிக்கா, சவுதி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் எதிர்விளைவாக சீனாவுடன் சவுதி நெருக்கம் காட்டி வந்தது.
இந்த சூழலில் பிரதமர் மோடியின் பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அடிக்கடி சவுதி அரேபியாவுக்கு சென்று இளவரசர் சல்மானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளால் சவுதி அரேபியா மீண்டும் அமெரிக்கா, இந்தியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது.
கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சவுதி இளவரசர் சல்மானும் மோதல் போக்கை கடைபிடித்தனர். ஆனால் டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் அதிபர் பைடன், இளவரசர் சல்மானின் கரங்களை பிரதமர் நரேந்திர மோடி ஒன்றுசேர்த்து வைத்தார்.
இந்த பின்னணியில் ஜி-20 உச்சி மாநாட்டில், இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கையெழுத்திட்டன.
ஐ.எம்.இ.சி. என்றழைக்கப்படும் புதிய பொருளாதார வழித்தட திட்டத்தின் மூலம் சீனாவின் ‘பெல்ட் அன்ட் ரோடு’ திட்டத்துக்கு இந்தியா நேரடியாக சவால் விடுத்திருக்கிறது.
ஐ.எம்.இ.சி. வழித்தடம் சுமார் 6,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இதில் 3,500 கி.மீ. தொலைவு கடல் வழி பாதை ஆகும். புதியவழித்தடத்தின் மூலம் இந்தியாவின் தயாரிப்புகள் மிக விரைவாகஐரோப்பிய நாடுகளை சென்றடையும். தற்போது இந்தியாவில் இருந்து புறப்படும் சரக்கு கப்பல் ஜெர்மனியை சென்றடைய சுமார் 36 நாட்கள் ஆகிறது. புதிய வழித்தடம் செயல்பாட்டுக்கு வரும்போது 14 நாட்களில் இந்திய சரக்குகள், ஜெர்மனியை சென்றடையும். இதன்மூலம் நேரமும் செலவும் சேமிக்கப்படும்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
புதிய பொருளாதார வழித்தடத்தில் இருபுறமும் மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்படும். அதோடு ஹைட்ரஜனை கொண்டு செல்ல ராட்சத குழாய்களும் பதிக்கப்படும்.
இந்த திட்டத்தால் இந்தியா,மத்திய கிழக்கு, ஐரோப்பியநாடுகளின் பொருளாதாரம்அபரிமிதமாக வளர்ச்சி அடையும்.லட்சக்கணக்கான மக்களுக்குவேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.