உலக அளவில் சாதித்தை விட மிக அதிகம் அவர் நம் நாட்டில் செய்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370வை ரத்து செய்தார். அந்த பிரிவின் விளைவாக தான் பாகிஸ்தான் காஷ்மீரில் உரிமை கோரியது . அந்த 370 பிரிவினால் தான் காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சனை ஆனது. ஒரே ஒரு தோட்டா கூட சுடப்படாமல் நாடாளுமன்றத்தின் பேனா முனையினால் குத்தி, காஷ்மீர் விவகாரத்திலிருந்து பாகிஸ்தானை தூக்கி வெளியே போட்டார்.
காஷ்மீரை அமைதி பூங்காவாக்கினார். வளர்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு மட்டுமே 3.5 கோடி சுற்றுலா பயணிகள் அங்கு வந்துள்ளனர். இது எப்போதும் இல்லாத உச்சமாகும். இந்திய விவகாரங்களில் பாகிஸ்தானை வெறும் அடிகுறிப்பாக ஆக்கிவிட்டார்.
மிக தைரியமாக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்தார். இதன் மூலமாக இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த, சமண மதத்தை சார்ந்தவர்கள், யூதர்களுக்கு இந்திய குடியுரிமையை பெறுவது சுலபமானது. காந்தி, நேரு, பட்டேல் ஆகியோர் கொடுத்த வாக்குறுதி இது. மார்க்சிஸ்ட்களாலும் மன்மோகன் சிங்காலும் நிறைவேற்ற நினைத்தாலும் முடியாமல் போனதை மோடி நிறைவேற்றினார்.
பல நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாமல், ஹிந்து- முஸ்லிம்கள் உறவில் பெரும் பிளவை ஏற்படுத்திய, ராமஜன்ம பூமி பிரச்சனையை மோடி ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தீர்த்து வரலாற்றுப் பிரச்சினையை சரி செய்தார். உச்ச நீதிமன்றத்தின் ஒருமித்த ஆணையை கொண்டு ராமர் கோவிலை கட்டினார். கோவிலை எதிர்த்த முஸ்லிம்கள் கூட இதை வரவேற்றனர்.
வேற்றுமைகளை கொண்ட இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக ஸ்ரீ ராமபிரானின் மூர்த்தியை மோடி நிறுவினர். இதன் மூலம் ஔவுரங்கசீப் காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார். 72 ஆண்டு காலமாக இந்திய அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்த சொல்லுகிற விஷயம் இது. உச்ச நீதிமன்றம் பலமுறை நடைமுறைப்படுத்த அறிவுறுத்திய பின்னரும் எந்த அரசாங்கமும் தொட தைரியமற்றுக் கிடந்த விஷயமிது. இப்படி அவரது சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
2047 க்கான தொலைநோக்கு
2047 ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு திட்டத்தை உலகத்தின் முன்பும், நாட்டு மக்கள் முன்பும் வைத்த ஒரே தலைவர் மோடி தான். அது அவரது வெற்று ஆசையை வெளிப்படுத்தும் திட்டமல்ல. அதற்கு அடித்தளமாக உறுதியான தரவுகளும் தர்க்கங்களும் கூரிய திட்டமிடலும் உள்ளன.
2027 க்குள் இந்திய பொருளாதாரம் ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, உலகின் மூன்றாவது வலுவான பொருளாதாரமாக உருவாகும் . இந்தியாவை தவிர்த்துவிட்டு சீனாவுடன் கூட்டு சேர்ந்த மேற்கத்திய நாடுகள் தங்கள் சீன பிணைப்பை இப்பொழுது வேகமாக முறித்துக் கொண்டு வருகின்றன.
சீனாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்வது என்று சட்டம் இயற்றியுள்ளது. இதுவரை சீனாவுடன் (சீனா பிளஸ்) என்ற அதன் கொள்கை சீனாவை தவிர்த்து (சீனா மைனஸ்) என்பதாக மாறி உள்ளது. இதனால் உலக அரங்கில் இதுவரை சீனா இருந்த இடத்தை இந்தியா நிரப்பும் வாய்ப்பு வந்துள்ளது.
எல்லோரும் எதிர்பார்ப்பதை போல் போரில் உக்ரேன் வென்றால் அமெரிக்க – மேற்கத்திய நாடுகளை ஒரு கையாலும் அவர்களுக்கு எதிரான ரஷ்யாவை மறுகையாலும் அரவணைத்துச் செல்லும் ஜனநாயக நாடாக இந்தியா விளங்கும். 1950 , 60 களில் உலகை பிளவுபடுத்தி இருந்த பனிப்போர் மீண்டும் வராமல் தவிர்த்து, உலகைக் காக்க இந்தியாவால் மட்டுமே முடியும்.
இதுதான் மோடி மக்களுக்கு கொடுப்பது. இண்டி கூட்டணி எதை கொடுக்கும் ?