”போதைப் பொருளை ஒழிக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் வரும் சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, 50,000 கிளைக் கூட்டங்கள் நடத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,” என, தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பா.ஜ., சார்பில், தமிழகத்தை போதைப்பொருள் தலைநகரமாக மாற்றியதை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், அண்ணாமலை பேசியதாவது: பள்ளி செல்லும் மாணவர்கள் மது குடிப்பதை பார்க்க முடிகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரி விடுதிகளில் எளிதில் கிடைக்கிறது. தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடத்தியுள்ளார்.
நாளையில் இருந்து ஏழு நாட்கள், 19ம் தேதி வரை பா.ஜ.,வின் ஒவ்வொரு தொண்டனும், நிர்வாகியும் போதைப் பொருளை ஒழிக்க, தினமும், 2 மணி நேரம், 3 மணி நேரம் என, ஒரு வாரத்திற்கு, 15 மணி நேரம் நேரம் வேலை செய்வர். பள்ளி, கல்லுாரி, அடுக்குமாடி குடியிருப்புகள், பஸ் நிலையங்களுக்கு சென்று போதைப் பொருளால் ஏற்படும் விளைவு குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்துவர்.
போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் வரும் சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, 50,000 கிளைக் கூட்டங்கள் நடத்தப்படும். இதில், பொதுமக்கள் பங்கேற்பர். கள்ளுக்கடை திறப்பதன் வாயிலாக, அரசுக்கு, 2028ல், 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று பா.ஜ., வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்களுடன் இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக, பா.ஜ., யுத்தம் நடத்தும். இதற்காக, தனி இணையதளம் உருவாக்கப்படும். சொந்த குழந்தையை தாய் சந்தேகப்படும் அளவுக்கு, தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், இந்த அவலம் நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.