5000 வருட செய்யுள் சொல்லுகிறது.. தமிழகம் ஆன்மிகம் மண்

எங்கும் அதர்மம் மேலோங்கி இருப்பதை பார்த்த நாரதர், யமுனா நதி தீரத்தில் வந்தமர்ந்தார். அங்கு ஒரு யுவதி இரண்டு கிழவர்களை வைத்துக்கொண்டு அழுவதை பார்த்து நீ யார் என்று கேட்கிறார். அதற்கு அவள், இவர்கள் என் மகன்கள். பெரியவன் ஞானம், இளையவன் வைராக்கியம் என்றெல்லாம் சொல்லிவிட்டு கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்கிறாள்.
உத்பன்னா த்ரவிடே சஹா
வத்திய கர்நாடகே கதா |
க்வசித் க்வசின் மஹாராஷ்ட்ரே
குர்ஜரே ஜீரேதா கதா ||
(பாகவத மஹாத்மியம். 1.48)
(நான் திராவிட தேசத்தில் பிறந்தேன். கன்னட தேசத்தில் வளர்ந்தேன். பின் மராட்டிய தேசத்தில் சிறப்புற்றேன். பின் குர்ஜர தேசத்தில் மூப்படைந்தேன்).
அதாவது பக்தி என்ற விஷயத்தை உலகுக்கு சொன்னதே தமிழகம்தான். அன்றைய திராவிட தேசம் என்பதை குறிக்கும்போது இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா போன்ற பகுதிகளை உள்ளடக்கி கூறுகிறது பாகவத புராணம்.
என்றுமே தமிழகம் பெரியவர்களின் பூமி. ஈவேராவின் பூமி அல்ல. அதனால்தான் பாரதி கூட வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாடுகிறார்.
பகுத்தறிவு என்றால் ஒரு விஷயத்தை அக்கக்காக பகுத்து பார்த்து, ஆராய்ந்து பின் அறிவது பகுத்தறிவு. கண்ணுக்கு தெரியவில்லை, அறிவை கொண்டு யோசிக்கவில்லை என்பதால் பொசுக்கென்று இல்லை என்று சொல்வது அல்ல. எல்லா புலன்களாலும் உணர முடியாமல் போனாலும், கடைசியாக ஆறாம் அறிவை பயன்படுத்தி அதனாலும் உணரமுடியவில்லை என்று ஆனால்தான் அது பகுத்தறிவு என்று ஆகும்.
1857 முதல் சுதந்திர போராக இருக்கலாம். ஆனால், சிப்பாய்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்த முடியும் என்று 1806ல் உதாரணம் காட்டி வேலூரில் பலிதானம் ஆனது தமிழகத்தின் வரலாறு. அதுவே பின்னர் 1947ல் அடுத்த கடற்படை கலகமாக ஆனது. அப்போதுதான் வெள்ளையன் மூட்டை கட்ட துவங்கினான். பல நல்ல விஷயங்களுக்கு தமிழகம்தான் முன்னோடி. இங்கு துதிக்கப்படும் அளவுக்கு சித்தர்கள் நாட்டில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை.
என்ன ஒரு வருத்தமென்றால், இத்தனை நாள் சுதந்திர போராட்டத்துக்கும் பக்திக்கும் முன்னோடியாக இருந்துவிட்டு, இனி கால்டுவெல்லும், மாக்ஸ்முல்லரும் குழம்பினார்கள் என்பதற்காக குழம்பியது என்ன நியாயம்? முட்டாள் குழம்பலாம், புத்திசாலி குழம்பலாமா? அறிவுள்ளவன் தவறான பாதைக்கு போகலாமா? அரசியல் லாபம் கருதி தொடர் பொய்களை சொல்வதும், அதை நம்புவதும் பெரும் இழப்புக்கு வித்திடும். பாகவத மஹாத்மியம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர், கீழடி ஆதாரங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது. இன்னும் வேறு என்ன வேண்டும் தொன்றுதொட்டு தேசம் ஒன்று என்பதற்கு அத்தாட்சி?