பணத்தாசை அல்ல,பண்பாசை வென்றது

நபகன் என்று ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நிறைய புதல்வர்கள். கடைசி மகன் பெயர் நாபாகன். வயது முதிர்ந்த ராஜா நபகன் தனது ராஜ்யத்தை பிள்ளைகளிடம் விட்டுவிட்டு வனத்திற்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் நாபாகன் கல்வி கற்பதற்காக குருகுலம் போயிருந்தான். பணத்தாசை காரணமாக அவனுடைய அண்ணன்மார்கள் தந்தையின் செல்வத்தை பங்கு போட்டுக் கொண்டார்கள். கடைக்குட்டி நாபாகனுக்கு என எதுவும் விட்டு வைக்க வில்லை. கல்வி கற்று முடித்த நாபாகன் திரும்பி வந்தான். தன்னுடைய பங்கைக் கேட்டான். ஆனால் அவர்கள், ‘‘சொத்தைப் பிரிக்கும்போது உனக்கு அப்பாவை மட்டும் கொடுத்தோம். காட்டுக்குப் போய் அவருக்கு பணிவிடை செய்’’ என்றார்கள். நல்ல மனதுள்ள நாபாகன் காட்டுக்குப் போனான். தந்தையை சந்தித்து எல்லா விவரங்களையும் தெரிவித்தான். தந்தையார் மகனிடம் கூறினார்: ‘‘மகனே! உன்னுடைய பங்குக்கு என்னை கொடுத்திருக்கிறார்கள் அல்லவா? அதை அப்படியே ஏற்றுக்கொள். உனக்கு செல்வம் கிடைப்பதற்கு நான் உபாயம் சொல்கிறேன்”. அதே வனத்தில் ஆங்கீரச முனிவர் மோட்சம் அடைவதற்காக யாகம் செய்து கொண்டிருந்தார். நாபாகன் தந்தை சொல்படி அங்கே போனான். யாகத்தின் 6வது நாளில் சொல்லவேண்டிய வைஸ்வேதேவ சூக்தம் என்ற மந்திரத்தின் இரண்டு செய்யுள்களை அங்கிருந்தவர்கள் மறந்து போனார்கள். அவற்றை நாபாகன் அவர்களுக்கு ஞாபகமூட்டினான். பழுது இல்லாமல் யாகம் நிறைவேறியது. ஆங்கீரஸ முனிவருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. யாகத்தில் மிஞ்சிய செல்வத்தையெல்லாம் அவனுக்கு கொடுத்து ஆசியும் அருளினார்.
நாபாகன் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள முயன்றபோது கரு நிற தோற்றம் கொண்ட ஒரு மனிதர் அங்கே வந்தார். ‘‘சிறுவனே, இது எனக்கு உரிய பணம். எனவே அதை என்னிடம் கொடுத்துவிடு” என்றார். ‘‘முனிவர் எனக்கு கொடுத்த பணம் இது. எனக்குத்தான் சொந்தம்” என்றான் நாபாகன். ‘‘இது யாருக்கு சொந்தம் என்று போய் உன் அப்பாவைக் கேள்”. அப்பாவிடம் போய் நாபாகன் கேட்டபோது அவர் சொன்னார்: ‘‘உண்மைதான் மகனே, அந்த பணம் அந்த மனிதருடையதுதான். கருநிறம் கொண்ட அந்த மனிதர் வேறு யாருமல்ல, பகவான் ருத்திரன். யாகத்தில் எஞ்சியது எல்லாம் ருத்திரனுக்கே உரியது. எனவே அதை அவரிடம் சேர்ப்பித்துவிடு’’. நாபாகன் திரும்பிச்சென்று ருத்திரனை வணங்கி, ‘‘என் தந்தையார் இது உங்களுக்குத்தான் சொந்தம் எனக் கூறினார். ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என்று கூறினான். அவனுடைய நல்ல உள்ளத்தைக் கண்ட ருத்திரன் மகிழ்ச்சியடைந்து ‘‘குழந்தாய்! நீ சத்திய நெறி நிற்கிறாய். தந்தையின் கட்டளைப்படி நடக்கிறாய். உன் தந்தையும் உண்மையைக் கடைப்பிடிக்கிறார். உங்களைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உனக்கு பிரம்மஞானம் அருள்கிறேன். இந்த பணம் முழுவதையும் நீயே எடுத்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
நாபாகன் தந்தைக்கு பணிவிடை செய்து நலமாக, வளமாக வாழ்ந்தான்.