விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்க பசை பறிமுதல்

 

விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்க பசை நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த, ‘ ட்ரான்சிட்’ பயணி அதாவது மற்றொரு விமானத்தில் பயணிக்க இருந்த பயணி அங்குள்ள கழிப்பறைக்கு சென்றார். கழிப்பறைக்குள் இருந்த விமான நிலைய ஒப்பந்த ஊழியர் சஞ்சய் என்பவர், சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். அத்துடன் விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்லவும் முயன்றார். மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பிரசாந்த் குமாருக்கு, சஞ்சய் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கேட்டில் நிறுத்தி சோதனை நடத்தினர்.

சஞ்சய் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்த போது, 4 கிலோ தங்க பசை இருப்பது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு, 2.2 கோடி ரூபாய்.  இலங்கையில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், ‘ட்ரான்சிட்’ பயணியாக வந்தவர் முகமது நிஸ்தார் அபுசாலி. இவர் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் சுங்க சோதனைக்கு செல்லும் முன், குடியுரிமை சோதனை பகுதியில் உள்ள, கழிப்பறையில் மறைத்து வைத்து விட்டார்.

அவரது கூட்டாளியான ஒப்பந்த ஊழியர் சஞ்சய், தங்கத்தை வெளியே எடுத்து செல்லும் போது சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நேரத்தில், மற்றொரு விமானம் வாயிலாக இலங்கை செல்ல இருந்த, முகமது நிஸ்தார் அபுசாலி சுற்றி வளைக்கப்பட்டார். சஞ்சய் மற்றும் அபுசாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.