சென்னையின் பிரதான பிரச்சினைகளில் போக்குவரத்து முதன்மை பெற்றுள்ளது. நீண்ட நேரம் காத்திருப்பதால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல் மனரீதியாகவும் சோர்வடைந்து வருகின்றனர். மாநகரின் போக்குவரத்தில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. லட்சக்கணக்கானோர் தினந்தோறும் பல்வேறு புறநகரப் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்து செல்கின்றனர். மெட்ரோ ரயில் போக்குவரத்து வரவேற்கத் தக்கதுதான் என்ற போதிலும் கட்டணம் ஏழை எளிய மக்களுக்கு எட்டாததாகவே உள்ளது என்பதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதை ஓரளவு குறைத்தால் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் கணிசமாக அதிகரிக்கும். தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் நிலையங்களி டையே ரூ. 256 கோடி செலவில் மூன்றாவது தடம் அமைக்கும் பணி 2016ம் ஆண்டு தொடங்கியது. இப்பணியை ஒன்றரை ஆண்டில் முடிக்க ரயில்வே நிர்வாகம் உத்தேசித்திருந்தது. ஒப்பந்ததாரர் பிரச்சனை, தண்டவாளப்பாதையில் மண் நிரவுவதில் ஏற்பட்ட தாமதம் போன்றவற்றால் பணி இழுத்தடிக்கப்பட்டது.
மந்தகதியில் நடந்துவந்த மூன்றாவது ரயில் தடப்பணி, கொரோனாவை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்தாண்டு அடியோடு நிறுத்தப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மறுபடியும் பணி தொடங்கியது. முதலில் கூடுவாஞசேரி – செங்கல்பட்டு வரையிலான பாதையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது. இப்பணி துரிதமாக நடைபெற்றது. பணி நிறைவடைந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விரைவு ரயிலை இயக்கி சோதனை நடத்தியுள்ளார்.
தற்போது கூடுவாஞ்சேரி – தாம்பரம் இடையிலான 12 கி.மீ. தொலைவுக்கு மூன்றாவது தடம் அமைக்கும்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அநேகமாக அடுத்த மாதம் இந்த மூன்றாவது ரயில் தடத்தில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் சோதனைகள் அதிகரித்துள்ளதால் காலதாமதத்தை தவிர்க்க முடியவில்லை என்று ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது தடத்தில் ரயில்கள் இயக்கப் பட்டால் தாம்பரம் செங்கல்பட்டிடையே தற்போது இயக்கப்படுவதை விட கூடுதலாக 25 சதவீத ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டிலிருந்து கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்க முடியும். ரயில் போக்குவரத்து எதிர்பார்த்த அளவுக்கு வேகம் எடுக்காததால் பயணிகள் பேருந்துகளை நாடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். ஆனால் பேருந்து சேவையும் திருப்திகரமாக இல்லை.
அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலைக்காரணமாகக் காட்டி பேருந்து பயணம் தொடர்பாகவும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பணச்செலவு அதிகமா வதுடன் மன உளைச்சலும் உக்கிரமடைகிறது. எனவே இந்த கோடைகாலம் முடிவதற் குள்ளாவது மூன்றாவது தடத்தில் ரயில் சேவையை தொடங்கவேண்டும் என்பதே பயணிகளின் ஒருமித்த எதிர்பார்ப்பு. மூன்றாவது ரயில் தடத்தை படிப்படியாக புதுச்சேரி வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறது. சென்னை – புதுச்சேரி இடையே மூன்றாவது ரயில் தடம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் பொருளாதார வளர்ச்சியும் தழைக்கும்.