ஒட்டுமொத்த சமூகமும் தீர்மானமாக இருந்ததன் காரணமாகவே ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்றும் இந்த முடிவை எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் 73 ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அப்போது, மோகன் பாகவத் பேசியதாவது:
மக்கள் ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தால், முடியாத ஒன்றையும் முடித்துக் காட்ட முடியும். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
சுதந்திர தினத்தில் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைத்துப் பார்ப்போம்.
மக்களின் சக்தியால்தான் இந்த முடிவை நாட்டின் தலைவர் எடுத்தார். சுதந்திரத்தை பிற மாநிலங்கள் அனுபவிப்பது போல் ஜம்மு-காஷ்மீரும் அனுபவிக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். அரசமைப்புச் சட்டப்படி இனி பிற மாநிலங்களைப் போல் ஜம்மு-காஷ்மீர் மக்களும் அனைத்து உரிமைகளையும் பெறுவர் என்றார் மோகன் பாகவத்.
முன்னதாக, ஆர்எஸ்எஸ் பொதுச் செயலர் பையாஜி ஜோஷி, தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசுகையில், மக்களின் விருப்பங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. புதிய உச்சத்தை இந்தியா அடையும் என்றார்.