பரதன் பதில்கள்

யாக குண்டத்தில் பட்டுப் புடவைகள், பழங்கள், நாணயங்கள் ஆகியவற்றை போடுவதற்கு பதிலாக அவைகளை ஏழைகளுக்கு அளிக்கலாம் அல்லவா?

– சி. பூவரசன், வியாசர்பாடி

மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்தட்டும். அது அவர்களின் நம்பிக்கை. நீங்கள் நடத்தும் யாகத்தில் அவைகளைப் போடாமல் ஏழைகளுக்கு தானம்,  அன்னதானம் செய்யுங்களேன்…

 

தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நின்றால்தான் தேசபக்தியா என்று நீதிமன்றம் கருத்து   தெரிவித்துள்ளதே ?

– வளர்மதி சேகர், கிருஷ்ணகிரி

அது சரி… நீதிமன்றங்களில் நீதிபதிகள் உள்ளே வரும்போது எழுந்து நின்றால்தான் மரியாதையா என்று சிலர் கேட்கக் கூடுமே…!

 

‘தீபாவளி’  ஆரியன்  பண்டிகை  என்கிறார்களே  தி.க.வினர்?

– சோம. ராஜசேகர், கோட்டையூர்

அவர்கள் அகராதியில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் எல்லாம் தமிழன் பண்டிகை போலும்!

 

நம்ம நாட்டில் ஆங்கிலேய ஆட்சி வந்த பிறகுதான் கல்வியில் முன்னேற்றம்  என்கிறார்களே?

– வி. சுபஸ்ரீ, பேரளம்

ஆங்கிலேயன் வந்து சுமார் 300 வருஷமாச்சு. ஆனால் அதற்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பே நம்ம முப்பாட்டன் தஞ்சை பெரிய கோயில் போன்று ஏராளமான கோயில்களை கட்டினார்களே.. அவர்கள் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார்கள்?

 

சுகி சிவம், காஞ்சிப் பெரியவரை ஈ.வெ.ராவுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளாரே…?

– பெ. கிருஷ்ணமூர்த்தி, கொளத்தூர்

அவர் அப்படி பேசினாரா… என்ன பேசினார் என்பது உறுதியாகத் தெரியாது. ஒரு வேளை பேசியிருந்தால் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

 

கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசு கோயில்களில் தலித்துகளை அர்ச்சகர்களாக நியமித்துள்ளது பற்றி?

– கோ. சுந்தரராமன், திருப்பத்தூர்

அர்ச்சகர்களாக நியமித்தது இருக்கட்டும். அப்படியே இரண்டு தலித் சகோதரர்களை அவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பிலோ அகில இந்திய கமிட்டியான பொலிட் பீரோவிலோ நியமிக்கட்டுமே பார்க்கலாம்.

 

பிரதமர்  மோடியின்  நடவடிக்கைகளால்  கண்ட  பலன்  என்ன?

– சு. வானமாமலை, கோவில்பட்டி

* வெளிநாடுகளுடன் நல்லுறவு * சீனா, பாகிஸ்தான் அடாவடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி * ஊழல் இல்லாத ஆட்சி * கருப்புப் பணத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கை * வரி கட்டாதவர்கள் எல்லாம் வரி கட்டுகிறார்கள். இதெல்லாம் இருக்கட்டும். கொடி கட்டிப் பறந்த பருப்பு விலைகள் குறைந்துவிட்டது. அன்று ஒரு கிலோ ரூ.180க்கு விற்ற துவரம் பருப்பு இன்று 80 ரூபாய் தானே!